ஹசரங்க அசத்தல் பந்துவீச்சு; பெங்களூர் வெற்றி!

0
191

ஹசரங்கவின் அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க 128 ஓட்டங்களுக்கு கொல்கத்தா அணியை சுருட்டிய பெங்களூர் 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

ஐ. பி. எல். என்று அழைக்கப்படும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இன்று புதன்கிழமை நவி மும்பையில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைற் ரைடர்ஸ – றோயல் சலஞ்ர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூர் அணியின் டூ பிளசிஸ் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணிக்கு பெங்களூர் பந்துவீச்சாளர்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.

தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 10 ஓட்டங்கள், அஜிங்ய ரகானே 9 ஓட்டங்கள் என ஆட்டமிழந்தனர் பின்னர் வந்த, ஸ்ரேயாஸ் ஐயர் 13 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து சொற்ப ஓட்டங்களுடன் வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்வரிசை வீரர்கள் சற்று அதிரடி காட்டினர். அந்த்ரே ரசல் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பௌண்ட்ரியை விளாசி 25 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவிக்கெட்டாக உமேஷ் யாதவ் 2 பௌண்ட்ரிகள், ஒரு சிக்ஸருடன் 12 பந்துகளில் 18 ஓட்டங்களை எடுத்தார். இவர்கள் இருவரும் பெற்ற ஓட்டங்களே அந்த அணியின் வீரர் ஒருவர் பெற்ற ஆகக்கூடிய ஓட்டமாக அமைந்தன.

18.5 ஓவர்களே தாக்குப்பிடித்த கொல்கத்தா அணி 128 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

பெங்களூர் சார்பில் பந்துவீசிய வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்களையும், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணியின் ஆரம்ப வீரரகளும் சொற்ப ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தனர்.

டூ பிளசிஸ் 5 ஓட்டங்கள், அனுஜ் ராவத் 0, விராட் கோலி 12 ஓட்டங்கள் என ஆட்டமிழந்தனர்.

எனினும் நடுவரிசை வீரர்கள் சற்று நிதானம் காட்டினர். இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 14 ஓட்டங்களையும், ஹர்சல் பட்டேல் 10 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றி பெற வைத்தனர்.

19.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்று பெங்களூர் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவின் பந்துவீச்சில் ரிம் சௌதி 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.