ஹாஸாவின் ரபா நகரில், இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு, இஸ்ரேல், அமெரிக்க வெடி மருந்துகளை பயன்படுத்தியமை, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக, சி.என்.என் தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதிவான காணொளியை ஆய்வு செய்த வேளை, இந்த விடயம் தெரியவந்துள்ளது.ஹாஸாவின் தென் பகுதியில், இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, தீ ஏற்பட்டது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக, 45 ற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதுடன், 200 ற்கும் மேற்பட்ட மக்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரபா நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அநேகமானவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என, ஹாஸாவின் சுகாதார அமைச்சு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குவைத் அகதி முகாம் ஒன்று என அழைக்கப்படும் இந்த முகாமின் மீது, இஸ்ரேலின் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து ஆராய்ந்த, வெடி குண்டுகள் ஆயுத நிபுணர்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜிபியு 39 குண்டின் ஒரு பகுதியை காண முடிவதாக தெரிவித்துள்ளனர்.பொயிங் நிறுவனம், ஜிபியு 39 குண்டுகளை தயாரிக்கின்றது.
மூலோபாய ரீதியில், முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு, இந்த குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என, வெடிபொருள் ஆயுத நிபுணர் கிறிஸ்கொப் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவின் முன்னாள் உறுப்பினரான டிரெவெர் போல், குண்டு சிதறல்களை அடிப்படையாக வைத்து, ஜிபியு 39 குண்டே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.