126 ஓட்டங்களை தக்கவைத்து லக்னோவை 18 ஓட்டங்களால் வென்றது பெங்களூர்

0
117
Kolkata: Royal Challengers Bangalore celebrate after winning their Indian Premier League 2022 Eliminator cricket match against Lucknow Super Giants, at Eden Gardens in Kolkata, Wednesday, May 25, 2022. Royal Challengers Bangalore won the match by 14 runs. (Sportzpics for IPL/PTI Photo)(PTI05_26_2022_000008B)

லக்னோ விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (01) இரவு மிகவும் குறைந்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட ஐபிஎல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணியை 18 ஓட்டங்களால் வெற்றிகொள்ளச் செய்தனர்.

அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றதன் பலனாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து பெங்களூர் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசியதால் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

இந்த இரண்டு அணிகளும் பெங்களூரில் முதல் சுற்றில் ஏப்ரல் 10ஆம் திகதி சந்தித்துக்கொண்டபோது ஒட்டுமொத்தமாக 425 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுடன் 11 விக்கெட்களே வீழ்த்தப்பட்டன.

லக்னோவில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பெங்களூர் சார்பாக விராத் கோஹ்லியம் பவ் டு ப்ளெசிஸும் 9 ஓவர்கள் நிறைவில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

விராத் கோஹ்லி 31 ஓட்டங்களையும் பவ் டு ப்ளெசிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் காரணமாக இந்தப் போட்டியிலும் கணிசமான மொத்த எண்ணிக்கை குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சுழல்பந்துவீச்சாளர்களான ரவி பிஷ்னோய், அமித் மிஷ்ரா, கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரும் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கும் 8 விக்கெட்களைக் கைப்பற்றி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரை 126 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தினர்.

விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் ஆகியோரை விட தினேஷ் கார்த்திக் (16) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவி பிஷ்னோய் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமித் மிஷ்ரா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிருஷ்ணப்பா கௌதம் 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. போதாக்குறைக்கு போட்டியின் 2ஆவது ஓவரில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது உபாதைக்குள்ளான அணித் தலைவர் கே.எல். ராகுல் நொண்டியவாறு களம் விட்டு வெளியேறியது அவ்வணிக்கு பேரிடியைக் கொடுத்தது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 7 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

எனினும், மத்தியவரிசையில் நால்வர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதால் லக்னோ சுப்பர்  ஜயன்ட்ஸ் 100 ஓட்டங்களைக் கடந்தது.

க்ருணல் பாண்டியா (14), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (13), கிருஷ்ணப்பா கௌதம் (23), அமித் மிஷ்ரா (19), நவீன் உல் ஹக் (13) ஆகிய ஐவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

கே.எல். ராகுல் கடைசி ஆட்டக்காரராக துடுப்பெடுத்தாடிய போதிலும் அவரால் ஓட்டம் பெறமுடியாமல் போனது.

பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கர்ண் ஷர்மா 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைபற்றினர். க்ளென் மெக்ஸ்வெல் ஒரு ஓவரில் 3 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.