மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்த முடியாமல் போனமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளுமே காரணம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஊடகமொன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார். 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை எனவும் தமிழ் சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் இந்தியா ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் கவலை தெரிவித்து தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர், ‘உண்மையில் நாம் அனைவரும் மாகாண சபை தேர்தலை விரும்புகிறோம். தேர்தல் நடத்தப்படாதமைக்கு 2018ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு குறிப்பிட்ட சட்டமூலம் காரணமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் கட்சிகளும் குறிப்பிட்ட சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாலேயே தேர்தலை நடத்த முடியாது போனது. மாகாணங்களில் புதிய எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அது நடைபெறவில்லை. அதற்கு சில தடைகள் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக இது அவர்களின் சொந்த செயல். தேர்தலை தடுப்பதற்காக அவர்கள் அதை செய்தார்கள். அதன் விளைவே அது. 13ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களிடமுள்ள அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செயல்பாடுகளை கையாள வேண்டும். எனவே 13ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.