நாட்டின் சுயாதீனத்தை பாதுகாக்க, நாட்டு மக்கள் அனைவரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக போராட வேண்டும் என, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று, கொழும்பில் உள்ள பௌத்த கேந்திர மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தினாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. தவறு என்று தெரிந்தும், தவறான தீர்மானங்களை அவர் செயற்படுத்தினார். பொருளாதார பாதிப்பை முன்னிலைப்படுத்தி, தற்போது நாட்டுக்கு எதிராக, பல தீய சக்திகள், அரச ஆதரவுடன் செயற்படுகின்றன. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப் பினருடன், தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், இந்தியாவினால், பலவந்தமாக இலங்கைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், இலங்கை, இயல்பாகவே சமஷ்டி முறையிலான நாடாக அங்கிகரிக்கப்படும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், இலங்கை மீது கட்டப்பட்ட கூர்மையான கத்திகளை போல் உள்ளது. இந்த கத்திகள், அரசியலமைப்பு திருத்தம் என்ற கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாக, 13 ஆவது திருத்தம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே, அரசியலமைப்பின் ஊடாக, ஒருசில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார்.
13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சாதிய அடிப்படையில், தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும். வடக்கு மற்றும் கிழக்கில், வேளாளர் சாதியினர், பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து, கீழ் சாதியினரை அடிமை போல் செயற்படுத்துவார்கள். வடக்கு மாகாணத்தில், இன்றும் சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் புரையோடிப் போயுள்ளன. 13 ஆவது திருத்தம் ஊடாக, நாட்டில் இல்லாத பிரச்சினைகளுக்கு உயிர் கொடுக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிக்கிறார்.
1987 ஆம் ஆண்டு முதல், மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் எவரும், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.
ஆனால் மக்களாணை இல்லாமல், மக்களால் வெறுக்கப்படும் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கிறார். நாட்டுக்கு எதிரான இவரது செயற்பாடுகளுக்கு, மகா சங்கத்தினர், ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த, ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டின் சுயாதீனத்தை பாதுகாக்க, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக போராட வேண்டும்.
என குறிப்பிட்டுள்ளார்.