2வது ரிட்ஸ்பறி பாடசாலைகள் தொடர் ஓட்ட சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றியீட்டியது வங்கியகும்புர அணி

0
70

பதுளை, வின்சென்ட் டயஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது ரிட்ஸ்பறி பாடசாலைகள் தொடர் ஓட்ட சம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் பலம்வாய்ந்த வலல்ல ஏ. ரட்நாயக்க தேசிய கல்லூரி அணியை அதிரவைத்து வெலிமடை வங்கியகும்புர தேசிய பாடசாலை அணி வெற்றியீட்டி வரலாறு படைத்தது.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 x 800 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியை 10 நிமிடங்கள் 28.8 செக்கன்களில் நிறைவுசெய்த வங்கியகும்புர தேசிய பாடசாலை அணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தியது.அப் போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட வலல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரி (10:29.8 நி.) இரண்டாம் இடத்தையே பெற்றது.

எவ்வாறாயினும் முதலாம் நாளில் போன்றே இரண்டாம் நாளான இன்றைய தினமும் வலல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.முதல் நாளன்று 4 தங்கப் பதக்கங்களை சுவீரிகத்த ரட்நாயக்க மத்திய கல்லூரி, இரண்டாம் நாளான இன்று மேலும் 3 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தது.

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 800 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டி (8:34.4 நி.), 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 800 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டி (8:22.3 நி.), 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 4 x 800 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டி (8:13.5 நி.) ஆகியவற்றில் 3 தங்கப் பதக்கங்களை வலல்ல ரட்நாயக்க மத்திய கல்லூரி சுவீகரித்தது.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான 4 x 50 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் (29.8 செக்.) மொறட்டுவை வெற்றிநாயகி கன்னியாஸ்திரிகள் மடமும், 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான 4 x 50 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் (27.2 செக்.) நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியாஸ்திரிகள் மடமும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தன.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 4 x 50 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் (27.8 செக்.) தேர்ஸ்டன் கல்லூரியும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 4 x 50 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் (24.9 செக்.) வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தன.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியிலும் (49.9 செக்.), கலவை தொடர் ஓட்டப் போட்டியிலும் (2:19.3 நி.) வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.

போட்டியின் இரண்டாம் நாள் வரை இருபாலாரிலும் வலல்ல ஏ ரட்நாயக்க 7 தங்கப் பதக்கங்களுடன் முதலாம் இடத்திலும் வத்தளை லைசியம் 5 தங்கப் பதக்கங்களுடன் 2ஆம் இடத்திலும் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 3 தங்கப் பதக்கங்களுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.