28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

20இல் உள்வீட்டுச் சிக்கலா?

இலங்கையில் எதிர்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கின்றாரா? என்பதை அவ்வப்போது வெளிவரும் செய்திகளில்தான் தேடவேண்டியிருக்கின்றது. முன்னர் சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருந்த போதும் இவ்வாறானதொரு நிலைமைதான் காணப்பட்டது. சஜித்பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் நிலைமைகளில் மாற்றம் ஏற்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பெரிய முன்னேற்றங்களை இதுவரையில் காண முடியவில்லை. ‘அத்திபூத்தாற் போல்’ என்று கூறுவது போன்றுதான் சஜித்பிரேமதாச பேசுவதை காண முடிகின்றது. கொரொனாவை முன்வைத்து 20வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சஜித்பிரேமதாச குற்றம் சாட்டியிருப்பதான செய்தியொன்று வெளியாகியிருக்கின்றது. அவ்வாறாயின் எதிர்கட்சித் தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார்.

20வது திருத்தச்சடட்டம் இந்தளவிற்கு ஏன் பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது என்பதில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன. ஆளும் பொதுஜன பெரமுனவின் வெற்றியில் பிரதான பங்குவகித்த விமல்வீரவன்ச போன்றவர்கள் தடுமாறுவதும், அரசியல் யாப்பு விவகாரங்களில் நிபுணத்துவம்மிக்க பேராசிரியர் ஐp.எல்.பீரிஸ் போன்றவர்கள் அமைதியாக இருப்பதும் புரியாத புதிராகவே இருக்கின்றது. மகிந்த ராஜபக்ச எண்ணியிருந்தால் இந்த விடயத்தை மிகவும் இலகுவாக கையாண்டிருக்க முடியுமென்று கூறுவோரும் உண்டு. அவ்வாறாயின் அவர் அதனை ஏன் செய்யவில்லை?

இதற்கிடையில் பௌத்த மதபீடங்களின் இரண்டு பிரிவுகள் 20வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக பேசியிருப்பது தொடர்பிலும் சிலர் சந்தேங்களை வெளியிடுகின்றனர். அந்த பீடங்கள் இதில் சுயாதீனமாக தலையீடு செய்கின்றதா அல்லது இதற்கு பின்னாலும் ஏதேனும் தூண்டுதல்கள் இருக்கின்றனவா? – என்பதிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன. விடயங்களை அவதானித்தால் ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது, 20வது திருத்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் தொடர்பில் உள்வீட்டுக்குள் மகிழ்சியில்லை. இதன் காரணமாகவே இந்த விடயம் இந்தளவிற்கு புகைந்து கொண்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் மகிந்த அணிக்குள் எதிர்மாறான கருத்துக்கள் இருந்தன. வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் வெளிப்படையாகவே கோட்டாவிற்கு எதிராக பேசியிருந்தனர். ஆனாலும் இறுதியில் கோட்டபாயவை தவிர வேறு ஒரு பொருத்தமானவர் இல்லையென்னும் நிலைமை ஏற்பட்டது. வேறு ஒருவரை நிறுத்தினால் வெற்றிபெற முடியாதென்னும் நிலைமை உருவாகியது. இவ்வாறானதொரு சூழலில்தான் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்டபாளரானார். உண்மையில் மகிந்தவிடம் வேறு பொருத்தமான தெரிவுகள் இருந்திருக்கவில்லை.

தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே தன்னையொரு வேட்பாளராக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை கோட்டபாய ஆரம்பித்திருந்தார். விஜத்மக, எலிய என்னும் இரண்டு அமைப்புக்களை உருவாக்கி, சிங்கள மக்கள் மத்தியில் தனக்கான ஆதரவுத்தளத்தை ஏற்படுத்தியிருந்தார். தன்னைச் சுற்றி பெருந்தொகையான சிங்கள முன்னேறிய பிரிவினரை திரட்டியிருந்தார். இதன் காரணமாக கோட்டாவை தவிர்த்து வேறு ஒருவரை மகிந்த அணிக்குள் தேட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் கோட்டபாய தனிச்சிங்கள பெரும்பாண்மையின் ஆதரவுடன் ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். கோட்டபாய ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, 19வது திருத்தச்சட்டம் அவரை முழுமையானதொரு ஜனாதிபதியாக செயற்படுவதை தடுக்கின்றது. அவர் அதிகமாக நாடாளுமன்றத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.

இந்த நிலையில்தான் 20வது திருத்தச்சட்டம் பேசுபொருளாகியிருக்கின்றது. 20வது திருத்தச்சட்டம் வந்தால் கோட்டபாய முழுமையான ஜனாதிபதியாகிவிடுவார். ஆனால் பிரதமர் மகிந்தவின் அதிகாரங்கள் மட்டுப்பட்டுவிடும். இந்த அடிப்படையில்தான் நோக்கினால், இது ஒரு உள்வீட்டுப் பிரச்சினையோ என்னும் சந்தேகம் எழுவது இயல்பே!
ஆசிரியர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles