20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தை வைத்துக்கொள்வதா இலக்கு ? – ஆளும் தரப்பிடம்  துமிந்த திஸாநாயக்க கேள்வி!

0
7

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டுக்கு பாரிய சேவையாற்ற முடியும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின்  பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 20 ஆண்டுளேனும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறெனில் அடுத்த 20 ஆண்டுகளுக்கும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அரசாங்கத்தின் இலக்கா என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவையிலுள்ள வியாழக்கிழமை (07) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

16ஆம் திகதி சுதந்திர கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளோம். கிராமத்துக்கு தேவையான சேவையை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

ஆளுங்கட்சி அபிவிருத்திகள் தொடர்பில் எதுவும் பேசாமல், ஊழல், மோசடிகள் குறித்து மாத்திரமே பேசிக் கொண்டிருக்கிறது. எனவே எதிர்க்கட்சிகள் இணைந்து கிராம மக்களுக்கு பாரிய சேவையாற்ற வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.

நாட்டிலுள்ள பிரதான பிரச்சினைகளின் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை பிரதானமாகக் காணப்படுகிறது. இதனால் அவர்கள் வீதிக்கிறங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 

முன்னர் இளைஞர் சேவை மன்றம் இளைஞர்களின் தேவை அறிந்து அவற்றுக்காக செயற்பட்டது. ஆனால் தற்போது அது முற்றாக ஜே.வி.பி. மயப்படுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்ததல்ல.

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி ஆட்சிகளில் இளைஞர் சேவை மன்றத்தினை அரசியல்மயப்படுத்துவதற்கு எவ்வித முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை.

தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதால், இளைஞர்களை தம்வசம் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையே அக்கட்சி முன்னெடுத்து வருகிறது. எனினும் இளைஞர்கள் அதற்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

விவசாயிகள் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் என்று நிறைவேற்றப்படும் என்று காத்திருக்கின்றனர். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடும் வழங்கப்படவில்லை, உர மானியமும் வழங்கப்படவில்லை.

மறுபுறதம் எரிபொருள் விலை, மின் கட்டணம் என்பதை அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் தேர்தல் காலத்தில் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அவற்றுக்கு முரணாகவே செயற்பட்டு வருகிறது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த அரசாங்கத்தினால் நாட்டுக்கு பாரிய சேவையாற்ற முடியும். ஆனால் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 20 ஆண்டுளேனும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதற்கு முன்னர் டில்வின் என்ன கூறினார்? நாட்டைக் கட்டியெழுப்ப 6 மாதங்கள் போதும் எனக் கூறினார். தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையிலேயே டில்வின் இவ்வாறானதொரு கருத்தினைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

76 ஆண்டுகள் நாட்டுக்கு சாபம் என கடுமையாக விமர்சித்தவர்களுக்கு இப்போதாவது யதார்த்தம் புரிகின்றதல்லவா? அரசாங்கம் எந்தளவுக்கு பொய் கூறியிருக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். எதிர்காலத்தில் மக்கள் யதார்த்தத்தை புரிந்து கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றார்.