இலங்கை, பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2 ஆவது போட்டியில் இலங்கை வீராங்கனை ஓஷதி ரணசிங்க 5 விக்கெட்களை வீழ்த்தினார். கடந்த 20 வருடங்களில் மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட் வீழ்த்தியமை இதுவே முதல் தடவையாகும்.
கடந்த வியாழக்கிழமை எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 58 ஓட்டங்களால் வென்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களைப் பெற்றது. அணித்தலைவி சாமரி அத்தபத்து 60 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களைக் குவித்தார். ஹிர்ஷிதா சமரவிக்ரம 48 பந்துகளில் 45 ஓட்டங்களையும் கவீஷா தில்ஹாரி 15 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 29.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவி நிகார் சுல்தானா 51 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ஓஷதி ரணசிங்க 6 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட்களை வீழ்த்தியமை இது 3 ஆவது தடவையாகும்.
2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் சுதர்ஷினி சிவானந்தன் 2 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். 2003 மார்ச்சில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக சந்தமாலி தோலவத்த 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
ஆதன்பின் 20 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கை சார்பில் ஓஷதி ரணசிங்க 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் அவர் வென்றார்.
இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 3 ஆவது போட்டி எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.