2008 மும்பைத் தாக்குதல்: தஹாவுர் ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

0
122

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வர்த்தகர் தஹாவுர் ரானாவை 2008 மும்பை தாக்குதல்கள் தொடர்பில் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மும்பையில் 2008 நவம்பர் 26 ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கம் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.

அந்த தாக்குதலை நடத்திய இயக்கத்திற்கு உதவிய குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்காவில் தஹாவுர் ராணா 2009 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

பாகிஸ்தானில் பிறந்த தஹாவுர் ரானா (62) கனேடிய பிரஜையாவார். மருத்துவரான அவர் அமெரிக்காவின் சிகாக்கோவில் பல வர்த்தங்களை நடத்தி வந்தார்.

2008 மும்பைத் தாக்குதல்களை நடத்துவதற்காக தனது நண்பரான டேவிட் ஹெட்லியுடன் இணைந்து லக்ஷர் ஈ தொய்பா அமைப்புக்கு ரானா உதவியளித்ததாக இந்தியா குற்றம் சுமத்துகிறது. டேவிட் ஹட்லி அமெரிக்காவில் 35 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கொவிட்19 தொற்றுக்குள்ளான நிலையில் தஹாவுர் ரானா அமெரிக்க சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

எனினும் அவரை நாடு கடத்துமாறு இந்தியா கோரியதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு தஹாவுர் ரானா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரை இந்தியாவுக்க நாடு கடத்துவதற்கு கலிபோர்னியாவிலுள்ள மாவட்ட நீதிமன்றமொன்றின் நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியான் நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளார்.