இன்னும் மூன்று வருடங்களில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள தனது அணியில் ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி பங்குபற்றக்கூடியதாக இருக்கும் என இந்திய அணியின் புதிய பயிற்றுநர் கௌதம் கம்பீர் கருதுகிறார்.
அனுபவம் வாய்ந்த ஜோடியினரான ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரிடமும் சர்வதேச கிரிக்கெட் ஏராளமாக குடிகொண்டிருப்பதாக கம்பீர் நம்புகிறார். மேலும் அவர்கள் இருவரும் 2027 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணப் போட்டிவரை விளையாடக்கூடியவர்கள் என்பதை கம்பீர் மறுக்கவில்லை.
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கடந்த மாதம் நிறைவுபெற்ற 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் தோல்வி அடையாத அணியாக இந்தியா சம்பியனான சூட்டோடு விராத் கோஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் சர்வதேச ரி20 கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றனர்.
அடுத்த 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது ரோஹித் ஷர்மா 40 வயதை எட்டியிருப்பதுடன் விராத் கோஹ்லிக்கு 38 வயதாக இருக்கும். அப்போது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடக்கூடிய உடல் வலிமை எந்தளவு இருக்கும் என்பதை இப்போது கூறமுடியாது.
எவ்வாறாயினும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவர்கள் இருவரும் இந்திய அணியில் பிரதான பங்காற்ற வேண்டும் என கம்பீர் எதிர்பார்க்கிறார்.