பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களும் புகையிலை நிறுவனங்கள், மதுபான நிலையங்களுக்கு அடிபணிந்து போவதற்கு தயாராகக் கூடாது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு சரியான பாதையில் பயணிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவதானிக்க வேண்டியது அவசியம்.
அவர்கள் கொடுக்கும் வரப்பிரசாதாங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்படக்கூடாது என்றே நான் கூறுகின்றேன்.
போதைப் பொருள் பாவனை மதுபான பாவனையை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு அரசாங்கங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தாலும்கூட போதைப் பொருள், மதுபான பாவனை அதிகரித்துள்ளது.
எமது நாட்டை பொறுத்தவரையில் சட்டவிரோத மதுபானம், போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
எமது நாட்டில் மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பிலான நிரந்தர கொள்கை இல்லாமை பாரிய சிக்கலாகும்.
மக்களது சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக போதைப்பொருள் ஒழிப்புக்கான செலவினத்தை குறைப்பதற்காக போதைப் பொருள் மற்றும் மதுபான ஒழிப்பு தொடர்பிலான தேசிய கொள்கையை பின்பற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும்.
எதிர்க் கட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் இடம்பெறும் சந்திப்புகள் இடம்பெறுகின்றன. நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களின்போது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்தே அவ்வாறான சந்திப்புக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை அதேபோன்று செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெற்று வருகின்றன.
அந்த சந்திப்புகளுக்கு வந்த யோசனைகளையே நான் இந்த சபையில் முன்வைக்கின்றேன்.