இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையில்லை. 225 பேரில் 150 பேரை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்ற எண்ணப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஒப்பந்தங்கள் குறித்து எதனையும் பேசவில்லை. சர்வட்சி அரசாங்கத்தக்கான காலவரையறை குறித்தே பேசினோம். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏனைய கட்சிகளுடன் பொது உடன்பாடு எட்டப்பட வேண்டியது அவசியமாகும்.
எவ்வித காலவரையறையும் இல்லாமல், ஆட்சியை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது என்ற விடயத்துக்கு உடன்பட முடியாது.
தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு, மக்கள் ஆணை இல்லை. இதனையே நாம் வலியுறுத்தினோம். அதனையே அனுரகுமார திசாநாயக்கவும் வலியுறுத்தினார்.
இவ்விடயத்தையே நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
பொதுவேலைப்பாட்டுக்கு உடன்பட்ட இடைக்கால் அரசாங்கமா, சர்வகட்சி அரசாங்கமா என்பதை சிந்திக்க வேண்டும்.
எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தலொன்றுக்கு செல்ல முடியும்.
19ஆவது திருத்தத்துக்கு அமைவாக ஜனாதிபதியின் ஐந்து வருட பதவிக்காலத்தில் நான்கரை வருடங்களை மாற்றமுடியாது என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது முன்வைத்துள்ள 22ஆவது திருத்தத்துக்கு அமைவாக இரண்டரை வருடங்களில் ஆட்சியை கலைப்பதற்கு ஜனாதிபதியால் முடியும்.
எனவே எதிர்வரும் மார்ச் மாதம் அரசாங்கத்தலை கலைக்க முடியும்.
உண்மையில் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. எந்த நேரத்திலும் அரசாங்கம் வீழ்ச்சியடையலாம்.
225 பேரில் 150 பேரை எந்த வேளையில் வீட்டுக்கு அனுப்பலாம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர்.
அந்தத் தரப்பினரே தற்போது இந்த அரசாங்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே மக்கள் ஆணையில்லாத நேர்மையற்ற அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வது.