22ஆவது திருத்த சட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்

0
122

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்து நிறைவேற்று அதிகாரத்தினை வலுப்படுத்திய அனைத்து பிரதிநிதிகளுக்கும், தமது தவறுகளை திருத்திக்கொள்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களினதும் ஒட்டுமொத்த பொதுமக்களினதும் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 22ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தும் வகையில் 19ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களும் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் 20ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றி வலுவானதொரு நிறைவேற்று அதிகாரத்தினை கட்டமைத்துள்ளார்கள். இவ்வாறான அதிகாரக் குவிப்பும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியல் முறைமை மாற்றம் சம்பந்தமாக தொடர்ச்சியாக கரிசனை செலுத்திய அதேவேளை அரசியலமைப்பு மாற்றத்தினையும் தமது கோரிக்கைகளுள் ஒன்றாக கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தற்போது 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு நிகரான ஏற்பாடுகளை கொண்டதாகவே 22ஆவது திருத்தச் சட்டமூலம் வரையப்பட்டுள்ளது. அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுகின்றபோது 21ஆவது திருத்தமாகவே பாராளுமன்றத்தில் உள்வாங்கப்படவுள்ளது. மேலும், தற்போது அரசியல் பிரதிநிதிகள் அனைவருக்கும் கடந்த காலத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்தமையால் இழைத்த தவறுகளை மீண்டும் திருத்திக்கொள்வதற்கு வரலாற்றுச் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சொந்த நலன்களை முன்னிலைப்படுத்தாது, நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு பொதுமக்களின் நிலைப்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு ஒன்றுபடுவதன் மூலமே நாட்டில் உள்ள நெருக்கடிகளை தவிர்த்து, சிறந்ததொரு எதிர்காலத்தினை, நல்லிணக்கத்தினை கட்டியெழுப்ப முடியும் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.