கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேரின் இறுதிக்கிரியைகளை அந்நாட்டிலேயே முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் குறித்த 06 பேரின் இறுதிக்கிரியைகளையும் கனடாவில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.இதற்கு உறவினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகள் காரணமாக சடலங்களை கனேடிய பொலிஸார் இன்னும் விடுவிக்கவில்லை.கனடாவின் ஒட்டாவா – பார்ஹேவன் பகுதியிலுள்ள வீடொன்றில் 06 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் இரவு பொலிஸ் அவசரப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.தனுஷ்க விக்ரமசிங்கவின் இரண்டரை மாத கெலி என்ற பெண் குழந்தையும் இரண்டு வயதான அஷ்வினி, நான்கு வயதான ரின்யானா என்ற பெண் பிள்ளைகளும் ஏழு வயதான இனுக என்ற மகனும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.இந்த நான்கு பிள்ளைகளினதும் தாயான 35 வயதான தர்ஷனி ஏக்கநாயக்கவும் கொலை செய்யப்பட்டிருந்ததுடன், அந்த வீட்டிலேயே வசித்த 40 வயதான காமினி அமரகோன் என்பவரது சடலமும் அங்கிருந்து மீட்கப்பட்டதாக ஒட்டாவா பொலிஸார் அறிவித்துள்ளனர்.உயிரிழந்த சிறார்களின் தந்தையான தனுஷ்க விக்ரமசிங்க காயமடைந்த நிலையில், தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.தனுஷ்க விக்ரமசிங்கவின் குடும்பம் அண்மையில் கடனாவில் புகலிடம் பெற்றுள்ளதுடன், இளைய பிள்ளையான கெலி விக்ரமசிங்க கனடாவிலேயே பிறந்துள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பில் 19 வயதான இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபரான ஃபெபிரியோ டி சொய்ஸா அந்த வீட்டிலேயே அறையொன்றில் இருந்துள்ளதுடன், அவரது 19 ஆவது பிறந்த நாளையும் கொலை செய்யப்பட்ட குடும்பத்தவர்களுடன் அவர் கொண்டாடியுள்ளார்.கொலை செய்யப்பட்ட தர்ஷனி ஏக்கநாயக்க குருணாகல் – பொல்கஹவெல பகுதியை சேர்ந்தவராவார்.