பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 6 மாதங்களுக்கு மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலை மிகவும் பெருமளவில் அதிகரித்தமை காரணமாக மீன்பிடித்துறையில் ஏற்படும் பாதகமான தாக்கத்துக்கு தீர்வு வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தீர்மானம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை.
எனவே, மீனவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதனை குறிக்கோளாக கொண்டு இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 6 மாத காலத்துக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக விவசாய, காணி, கால்நடை வள, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அதற்கமைய எரிபொருளாக டீசல் பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் ஒரு லீற்றர் டீசலுக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்துக்கு 300 000 ரூபா வரையான உச்ச எல்லைக்குள் மீன்பிடித்துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்hன கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
எரிபொருளாக மண்ணெண்ணை பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் 15 லீற்றர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்தில் ஆகக்கூடியது 25 நாட்கள் என்ற அடிப்படையில், தொழிலில் ஈடுபடும் நாட்களுக்கு மட்டும் வரையறுக்கப்படும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
டீசல் மற்றும் மண்ணெண்ணை விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டீசலுக்கான உச்ச நிவாரண விலையை 250 ரூபா என்ற மட்டத்திலும், மண்ணெண்ணைக்கான உச்ச விலை 150 ரூபா என்ற மட்டத்திலும் ஆக்க்கூடியது 6 மாத காலம் வரை டீசலுக்காக ஆக்ககூடியது சந்தை விலையிலிருந்து 7.5 சதவீத நிவாரணமும், மண்ணெண்ணைக்கு ஆக்ககூடியது சந்தை விலையிலிருந்து 12.5 சதவீத நிவாரணமும் மீனவர்களுக்கு கிடைக்கும் வகையில் மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.