கொரோனா வைரஸ் பரவலால் நெருக்கடிக்குள்ளான வியாபார நடவடிக்கைகளை மீள வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடன் செயல்திட்டத்தின் சலுகைக்காலம் 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்குள்ளான வியாபார நடவடிக்கைகளை மீள வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி, அரசாங்கத்துடன் இணைந்து கடன் வழங்கல் செயல்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது.
4 சதவீத வருடாந்த வட்டியுடன் 6 மாத சலுகைக்காலமும் உள்ளடங்கிய இந்தக் கடன்திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன்கள் 24 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
கொரோனா நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நிவாரணம் எனப் பெயரிடப்பட்ட இந்தக் கடன் வழங்கல் செயல்திட்டம் மூன்று கட்டங்களாகச் செயல்;படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எது எவ்வாறெனினும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை அச்சத்தால் ஏற்கனவே கடன்பெற்ற பல தொழில் முயற்சியாளர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் வலுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே கடனை மீளச் செலுத்துவதிலும் அவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால், அவர்களுக்கு உதவும் நோக்கில் சலுகைக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தக் கடன் செயல்திட்டத்தின் கீழ் கடன்பெற்ற தொழில் முயற்சியாளர்கள், கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மேலும் 3 மாத சலுகைக்காலம் வழங்கப்படும்.
எனவே இக்கடனைப் பெற்றுக்கொண்டவர்கள் அந்தந்த வங்கிகளில் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்து மேலும் 3 மாத சலுகைக்காலத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.