7 விக்கெட்டுக்களால் சென்னையை வீழ்த்தியது டெல்லி

0
162

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷாத் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றறன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

ஆரம்ப ஆட்டக்காரர்களாக டு பிளசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கினர். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 

டு பிளசிஸ் ரன் எதுவும் இன்றி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்த ஓவரில் ருதுராஜும் 5 ஓட்டங்களில் வெளியேறினார். 

இதனால் சென்னை அணி 7 ஓட்டங்களுக்கு ஆரம்ப விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.  

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொய்ன் அலி- சுரேஷ் ரய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  

24 பந்துகளில் 36 ஓட்டங்களை அடித்த மொய்ன் அலி, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு  ஓரளவு தாக்குப்பிடித்தாடி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும்  மறுமுனையில் சுரேஷ் ரய்னா அசத்தலாக ஆடினார். ஏதுவான பந்துகளை சிக்சருக்கு விளாசி அசத்திய அவர் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 54 ஓட்டங்களை பெற்று ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன் எதுவும் இன்றி போல்ட் ஆனார். 

இறுதியாக ஜோடி சேர்ந்த சாம் கரன் மற்றும் ஜடேஜா இறுதிக் கட்ட ஓவர்களில் அதிரடி காட்டினர். 

இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ஓட்டங்களை சேர்த்தது. ஜடேஜா 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கரன் 15 பந்துகளில் 34 ஓட்டங்களை விளாசி இறுதிப் பந்தில் போல்ட் ஆனார்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில், ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். 

அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன் பின்னர் பிரித்வி ஷா 72 (38) ஓட்டங்களுடனும், ஷிகர் தவான் 85 (54) ஓட்டங்களுடனும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 14 ஓட்டங்களில் வெளியேறினார்.

இறுதியில் ரிஷாத் பந்த் மற்றும் சிம்ரன் ஹேட்மேயர் ஜோடி சேர்ந்தாட டெல்லி அணி 18.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக தவான் தெரிவானார்.

சென்னை, சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.