கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 9 பந்தில் 27 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களைப்பெற்றது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ஓட்டங்களை எடுத்தார். மும்பை தரப்பில் அறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 12.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 121 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பையின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 9 பந்தில் 27 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் ரி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதாவது ரி20 கிரிக்கெட் வரலாற்றில் 8000 ஓட்டங்களைக் கடந்த இந்தியர்கள் பட்டியலில் 5ஆவது வீரராக சூர்யகுமார் இணைந்துள்ளார்.
இந்தப்பட்டியலில் விராட் கோலி (12,976ஓட்டங்கள்), ரோகித்
சர்மா (11,851 ஓட்டங்கள்), ஷிகர் தவான் (9,797 ஓட்டங்கள்), சுரேஷ் ரெய்னா (8,654 ஓட்டங்கள்) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.