9.11 பயங்கரவாத தாக்குதல்: 21 வருடங்கள் பூர்த்தி

0
193

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி, பயங்கரவாதிகள் வணிக விமானங்களை ஏவுகணைகளாகப் பயன்படுத்தி நியூயார்க்கின் உலக வர்த்தக மையம், பென்டகன் மற்றும் பென்சில்வேனியா துறையில் மோதியதில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர்.
வர்த்தக மையத்தின் 110-அடுக்கு இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்து தரைமட்டமாகின.
இந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகையே கதிகலங்கச்செய்தது.
பலரது உயிரை பலிகொண்ட இந்த கொடூர சம்பவத்துக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
9.11 என்ற இந்த நாள் சோகம் மிகுந்த நாளாக பார்க்கப்பட்டது.
9.11 பயங்கரவாத தாக்குதல்கள் உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது.
பயங்கரவாதிகள் கொடூரமான வழியில், அதிகப்பட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில், இவ்வளவு பெரிய திட்டத்தை தீட்டி தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற உண்மை உலக மக்களை அதிர வைத்தது.
அதற்கு சாட்சியாக இந்த தாக்குதல் இருந்தது.
9.11 தாக்குதல்களுக்கு பிறகு அமெரிக்காவும் மாறிப்போனது.
அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டன.
இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க உறுதி பூண்ட அமெரிக்கா அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது.
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், 9.11 தாக்குதல்கள், அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் இதயங்களிலும் ஒரு நீங்கா வடுவாக மாறிவிட்டது.