கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் காரணமாக கல்வித் துறையானது பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது என்று, கல்விசார் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் உலப்பன சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாக கல்வி துறையானது பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
கல்வி அமைச்சானது எவ்வித காரணங்களும் இல்லாமல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான தீர்மானத்தை எடுத்தது. இந்த தீர்மானம் காரணமாக ஒட்டுமொத்த மாணவர் சமூகமும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஏனெனில் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பிலான வேலைத்திட்டங்களை திட்டமிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்காது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர் சமூகமும் அதிபர், ஆசிரியர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தத் தீர்மானத்தினூடாக கல்வி அமைச்சுக்கு மூளை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூளை இருக்குமாயின் இவ்வாறான தீர்மானங்களுக்கு நாட்டின் கல்வித்துறையை அடமானம் வைக்காது.
பாடசாலைகள் தொடர்பிலான பிரச்சினைக்கு அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை.
கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக பாடசாலைகளை நடத்தி செல்வதற்கான அதிகாரங்களை மாகாணங்களின் அதிகாரிகளுக்கு வழங்குகின்றனர். மாகாண அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்றனர்.
அவ்வாறான சுற்றுநிருபங்களை வெளியடுவதற்காக கல்வி அமைச்சு உள்ளது. இன்று கல்வி அமைச்சானது ஊடகங்களுக்கான அறிக்கையிடலை மட்டுமே செய்கின்றது.
மாகாண பணிப்பாளர்கள் தங்களுக்கு தேவையான வகையில் தீர்மானங்களை எடுக்கின்றனர். அதிபர்கள் தீர்மானங்களை எடுக்க முடியாது அசாதாரண நிலைமையை அடைந்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக ஒட்டுமொத்த பாடசாலை கல்வி நடவடிக்கைகைளும் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
சில பிரதேசங்களில் சொற்ப அளவிலான மாணவர்கள் வருகை தந்துள்ளனர் எனினும் ஆசிரியர்கள் வரவில்லை. சில இடங்களில் ஆசிரியர்கள் வருகை தந்துள்ளனர் எனினும் மாணவர்கள் வரவில்லை. பாடசாலைக்கு வருகைதந்தவர்களுக்கு கற்பிப்பதற்கு வழிகள் இல்லை.
வீடுகளில் இருக்கும் மாணவர்களுக்கு நிகழ்தகை கற்றலை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.