225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நாகாநந்த கொடித்துவக்கு என்பவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டினால் இன்றைய சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர எம்.பி
225 பாராளுமன்ற உறுப்பினர்ளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நான் உரையாற்றினேன்.
நிதி அமைச்சரும் இன்று சபையில் உள்ளதால் ஒரு விடயத்தை கூறவேண்டும்.
நிதி அமைச்சுக்குக் கீழேயே லிற்றோ நிறுவனம் உள்ளது. நாகாநந்த கொடித்துவக்கு என்ற நபர் தொடச்சியாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றார்.
அவர் புரிந்துகொண்டு கதைக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் எனக்கு தெரியாது.
225 உறுப்பினர்களும் எரிவாயுக்களை கொள்ளையடித்து உண்கின்றோம் என்ற குற்றச்சாட்டை அவர் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார்.
95 டொலருக்கு காணப்பட்டதை 125 டொலருக்கு பெற்றுக்கொண்டதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்.
இன்றைய சபையில் பிரதமர் இருப்பதால் அவர் நிதி அமைச்சர் என்பதால் லிற்றோ நிறுவனம் அவருக்குக் கீழ் இருப்பதால் இதனை ஆராய்ந்துப் பார்க்குமாறு கோருகின்றேன்.
95 டொலருக்கு பெற்றுக்கொள்ள வேண்டிய எரிவாயு 125 டொலருக்கு பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பதை தயவுசெய்து இந்தப் பாராளுமன்றத்துக்கு கூறுங்கள்.
ஏனெனில் இதனை கேட்டுக்கொண்டு இருக்கும் மக்கள் எம்மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைப்பர். எனவே அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அமைச்சரவை ஒன்று இருந்தால் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள்.
எனவே பிரதமர் கேள்விகளை புறக்கணித்துவிட்டு செல்லும் நபர் அல்லர். இதற்கு பதிலளிக்குமாறு பிரதமரிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், இவ்விடயம் தொடர்பில் லிற்றோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தயவுசெய்து அதனை படித்துப் பாருங்கள். நாகாநந்த கொடித்துவக்கு யார் என்பதை நீங்களும் நானும் நன்கு அறிவீர்கள். பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், திருடர் ஒருவர் கூறிய கருத்தை முன்பின் ஆராய்ந்துப் பார்த்து கதைக்க வேண்டும். பொறுப்பற்ற வகையில் இந்த இடத்தில் உரையாற்றுவது யார்?
உயர்நீதிமன்றத்தால் பெயர் நீக்கப்பட்ட ஒருவர். பல நீதிமன்ற வழக்குகளில் தோல்வியடைந்த ஒருவர். அவர் எத்தனை வழக்குகளை தாக்கல் செய்துள்ளார் என்று பாருங்கள். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறி கனடாவில் அவர் சேகரித்த பணத்துக்கு என்ன நடந்தது, அது தொடர்பில் என்னிடம் கேட்கின்றீர்களா?
மீதியுள்ள விடயங்களை பிறகு கூறுகின்றேன். சேறுபூசுவதற்காக இவ்வாறான விடயங்களை கூறுகின்றார்கள்.
இதன்போது மீண்டும் கருத்துரைத்த தயாசிறி ஜயசேகர எம்.பி, நாகாநந்த கொடித்துவக்கு என்பவரின் பெயர் நீக்கப்படவில்லை. அவரது பெயர் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமரே நான் அதனை கூறவரவில்லை. சமூகத்தில் கூறப்படும் விடயத்தையே நான் இன்று கேள்வியாக முன்வைத்தேன். பல நாட்களாக இதற்கு பதிலளிக்காது லிற்றோ நிறுவனம் ஒளிந்து ஒளிந்து இருந்தது. இதற்கு யாரும் பதிலளிக்கவில்லை. எனினும் சமூகத்தில் வேறு விடயமே பேசப்படுகின்றது. அதனையே நான் கூறுகின்றேன்.
இதற்கு மீண்டும் பதிலளித்த பிரதமர், நாகாநந்த கொடித்துவக்கு தனக்காகவே நீதிமன்றத்துக்கு செல்கின்றார்.
நீதிமன்றத்துக்கு யாருக்கும் செல்ல முடியும். வேறு யாருக்காவும் யாரும் நீதிமன்றத்துக்கு செல்வதில்லை. லிற்றோ நிறுவனம் அன்றைய தினமே அறிக்கையை வெளியிட்டுவிட்டது. புதிய கூட்டணியை அமைப்பதற்கே இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என்றார்.