ரணிலுக்கு முன்னாலுள்ள சவால்கள்?

0
174

ஜனாதிபதி தெரிவின் முன்னாலிருந்த சவால்களை ரணில் விக்கிரமசிங்க சாதாரணமாக வெற்றிகொண்டிருந்தார். ஐம்பதுக்கு மேற்பட்ட வாக்கு வித்தி யாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். 45 வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் அனு
பவத்தை கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவால், ஒருமுறைகூட, தேர்தல்
மூலம் ஜனாதிபதியாக முடியவில்லை. அவரின் கட்சியின் சார்பிலேயே அவரால்
போட்டியிட முடியாத நிலைமையே இருந்தது. அந்தளவுக்கு அவர் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருந்தார். எனினும், நாட்டில் ஏற்பட்டி ருந்த அசாதாரணமான சூழ்நிலையால், பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம், அவரின், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கனவு ஈடேறியிருக்கின்றது. ஆனால், இப்போதுதான் ரணில் உண்மையான சவால்களை எதிர்கொள்ளப் போகின்றார்.
சர்வதேச அளவில் இன்னும் இலங்கையை ஓர் அரசியல் ஸ்திரமுள்ள நாடாக நோக்கும் நிலைமை ஏற்படவில்லை. ரணில் மேற்குலகின் அபிமா னத்தைப் பெற்றவராக இருந்தாலும்கூட, அவர் பாராளுமன்றத்தில் பலமுள்ள ஒருவராக இல்லை. அவர் இப்போதும் ராஜபக்ஷக்களின் கட்சியை சார்ந்தே இருக்கின்றார். இந்த நிலையில் ஏதோவொரு வகையில் ரணிலின் ஆட்சியா னது ராஜபக்ஷக்களின் நிழலில் இருப்பதான ஒரு பார்வையே ஏற்படுகின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பும் ரணிலுக்கு உண்டு.
விடயங்களை முன்கொண்டு செல்வதில் இது ஒரு தடையாகவே இருக்கப் போகின்றது. ஏனெனில், ராஜபக்ஷக்களின் நிழல் அரசாங்கத்தை ஒருபோதும் மேற்குலகு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த பின்னணியில்தான், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டி ருக்கின்றது. சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி வெற்றிபெற வேண் டும். அதனை வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவைகள் நடந்தால்தான், ரணிலால் விடயங்களை முன்கொண்டு செல்ல முடியும்.
இன்றைய நிலையில், வழமையான அணுகுமுறைகள் எவையும் இலங் கைக்கு கைகொடுக்கப் போவதில்லை. ஏனெனில், பொருளாதார நெருக்கடியி லிருந்து மீள வேண்டுமாயின், வெளிநாட்டு உதவிகளின்றி, ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியாது. வெளிநாட்டு உதவிகளைப் பெற வேண்டுமாயின், அவர்கள் எதிர்பார்க்கும் சில விடயங்களை செய்தேயாக வேண்டும்.
ஒருபுறம் வெளிநாட்டு உதவிகளை பெற்றுக் கொள்வதில் வெற்றி பெறுகின்ற அதேவேளை, நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை யும் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்த விடயத்தில் வெற்றிபெற வேண்டு மாயின் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கட்டாயமானது. அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம். சர்வதேச நாணய நிதியம் ஒரு சுயாதீன நிதி நிறுவனமாக இருந்தாலும்கூட, அது அமெரிக்காவின் நேரடி செல்வாக்குக்கு உட்பட்ட நிறுவனமாகும். அமெரிக்காவின் ஆர்வங்கள் சர்வதேச நாணய நிதியத்துக்குப் பின்னாலுண்டு. ஒருவேளை ராஜபக்ஷக்களின் கைகள் திரைமறைவில் அரசாங்கத்துக்குள் செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்னும் சந்தேகம் ஏற்பட்டால், மேற்குலக ரணிலை நம்பிப் பயணிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். இந்த விடயங்களை அறியாமல் ரணிலும் செயல்பட வில்லை.
இலங்கை தொடர்பில் மேற்குலகுக்கு சிக்கலான அனுபவங்கள் உள்ளன.
2015இல், இடம்பெற்ற ஆட்சி மாற்றத்திற்கு பின்னால், மேற்குலகு இருந்ததான பார்வைகள் உள்ளன. ஆனால், ஆட்சி மாற்றம் அவர்களின் எதிர்பார்ப்புக்களை
நிறைவேற்றவில்லை. இந்த நிலையில்தான் கோட்டாபய ராஜபக்ஷ, 69 இலட்சம் வாக்குகளால் வெற்றிபெற்று, மீளவும் ராஜபக்ஷக்களின் அதிகார மையத்தை தூக்கி நிறுத்தியிருந்தார். தற்போது மீளவும் ராஜபக்ஷக்கள் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில்தான், ரணில் விக்கிரமசிங்க அதிகார அரசியலுக்குள் மீளவும் கால்பதித்திருக்கின்றார்.
ஆனால், இம்முறை விடயங்கள் தலைகீழாக இடம்பெற்றிருக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் கட்சியின் ஆதரவுடன், அரங்குக்குள் நுழைந்திருக்கின்றார். ஒரே நேரத்தில் ராஜபக்ஷக்களின் செல்வாக்கிலிருந்த மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் தனது செல்வாக்குக்குள் கொண்டு வர வேண்டும், நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டு சவால்களையும் ஒரே நேரத்தில் கையாள்வதில்தான், ரணிலின் வெற்றி தங்கியிருக்கின்றது.