இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின், வடக்கு மாகாணக் கிளையினர், இன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையைக் கண்டித்தும், புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை தரம் 1ஐச் சேர்ந்தவருமான சி.ஜெயக்கந்தனின் பணிமனையும், உத்தியோகபூர்வ விடுதியும், கடந்த யூலை மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 முதல், நள்ளிரவு 12.00 மணி வரையான காலப் பகுதியில், தேடுதல் மேற்கொள்ளப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது, குறிப்பிட்டளவு எரிபொருள் அங்கிருந்து மீட்கப்பட்டதுடன், அவ்வாறு மீட்கப்பட்ட எரிபொருளை, புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத், எடுத்தும் சென்றிருந்தார்.
இந்த நிலையில், முறையான தேடுதல் அனுமதியின்றி, பொலிசாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு, அங்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேடுதலின் போது, அலுவலகத் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த எரிபொருளை, எவருடைய அனுமதியுமின்றி, புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி எடுத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போராட்டத்தில் ஈடுபட்ட, இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து, இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினர், ஊடக சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு மாகாண பிரதம செயலாளர், பொலிஸ்மா அதிபர், பொலிஸ் ஆணைக்குழு, மாவட்ட செயலாளர், சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ்மா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களுக்கான மகஜர்கள், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.