நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

0
133

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஐந்து விபத்துக்களில், ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக இரத்தினபுரி, கஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பிலப்பிட்டிய வீதி, பெல்மடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரத்தினபுரி பனாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்ல நோக்கிப் பயணித்த வான் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்த வானின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குருணாகள், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னல வீதி, தியகலமுல்ல பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வெரலுகம, வலக்கும்புருமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 66 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றின் பின்னால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தையடுத்து லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கண்டி கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெம்மாத்தக பிரதேசத்தில், லொறியொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

போத்தலே கீழ்ப்பிரிவை சேர்ந்த 27 வயது நபரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்த லொறியானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி, உதவியாளர் ஆகியோர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் லொறியின் சாரதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆராச்சிக்கட்டுவ எலகல்பிட்டிய வீதியில் ஆராச்சிக்கட்டுவ நோக்கி பயணித்த லொறியொன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

எலகல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஸ்யால அத்தனகல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 47 வயது நபர் உயிரிழந்துள்ளார்.

கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பாதசாரியே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவரை வத்துப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.