இப்படியும் நடக்கிறது!

0
160

இந்த ஊர்க்குருவி தினமும் இந்தப் பத்தியை எழுதினாலும் ஈழநாடுவின் தீவிர வாசகர்களிலும் ஒருவர்.
பத்திரிகையை கையில் எடுத்ததும் ஊர்க்குருவியர் திறந்து பார்ப்பது, இன்றைக்கு நம்மட அப்புக்குட்டியர் என்ன சொல்கிறார் என்றுதான்.
நேற்றைய பத்திரிகையை திறந்ததும் அப்புக்குட்டியற்ற கடியை படிச்சபோது சிரிப்பு வந்தாலும் அது சிரிப்பதற்கு மட்டுமானது அல்ல, சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டிய ஒன்றும்தான் என்ற எண்ணமே ஏற்பட்டது.
நேற்றைய பத்திரிகையை படிக்காதவர்களுக்காக அதனை மீண்டும் தருகின்றேன்.
ஆனந்தசங்கரி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இருக்கும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்கள் விரும்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து பயணிக்கலாம்.
அப்புக்குட்டி: நாங்கள் பயணிக்கிறதுக்கு, பஸ் எங்க போகுது எண்டும் சொன்னால்தானே ஐயா நாங்க ஏறலாம்.
ஏற்கனவே கூட்டமைப்பு எங்க போகுது எண்டதை தெரியாமல்தானே இறங்கி நிற்கிறம்.
அதுசரி பஸ்ஸை நீங்கள்தான் ஓட்டவேணும் எண்டும் அடம்பிடிச்சால் நம்பி ஏறலாம் எண்டுறியளோ?
இதுதான் அப்புக்குட்டியரின் கருத்தாக நேற்று வெளிவந்திருந்தது.
அப்புக்குட்டியர் கோபிக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.
‘பஸ்ஸை நீங்கள்தான் ஓட்டவேணும் என்று அடம்பிடிச்சால் நம்பி ஏறலாம் எண்டுறியளோ என்று கேட்டிருப்பதால், பஸ்ஸில் வேறொருவர் நடத்துனராக இருக்கிறார் என்று படிப்பவர்கள் நினைக்கப்போகின்றார்கள்.
ஓட்டுனர் மாத்திரமல்ல, நடத்துனரும் நீங்கள் தான் எண்டால் பஸ்ஸிலை ஏறலாம் எண்டுறியளோ?’ என்றே அப்புக்குட்டியர் கேட்டிருக்க வேண்டும்.
சரி இனி விசயத்திற்கு வருவோம்.
கூட்டமைப்பு எப்போதெல்லாம் நெருக்கடிகளை சந்திக்கின்றதோ, அல்லது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கின்றதோ அப்போதெல்லாம் ஆனந்த சங்கரியர் இப்படி அழைப்பு விடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
விக்கினேஸ்வரன் கூட்டமைப்பிலி ருந்து வெளியே வந்தபோதும் ஓடிச் சென்று அவரைச் சந்தித்து கட்சித் தலைமையை பொறுப்பெடுங்கள் என்று கோரிக்கை விடுத்தது ஞாபகமிருக்கலாம்.
கொழும்புக்கு போவதாக பஸ்ஸில் முன் பக்கத்தில் போட்டுக் கொண்டு போய்க்கொண்டிருந்த பஸ், திருகோணமலைக்கு போகின்றது என்பதால் வவுனியாவில் இறங்கி நிற்கின்ற பயணியிடம்போய் எங்கே போகிறோம் என்றே சொல்லாமல் ஏறுங்கள் என்று கேட்பதுபோல ஆனந்தசங்கரியர் கேட்டால், அவர்
ஏறுவாரா என்பதைக்கூட சங்கரியரால் புரிந்துகொள்ளமுடியவில்லையே என்று அப்போது இந்த ஊர்க்குருவியர் எண்ணியதுண்டு.
இப்போது கூட்டமைப்பு என்ற பஸ்ஸை ஓட்ட முடியாமல் மட்டுமல்ல, டிரைவர் ஆசனத்தில் கூட இருக்கமுடியாமல் ஒருவர் ஓட்டிச் சென்றுகொண்டிருக்கிறார்.
அவரே டிரைவர் ஆசனத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டு, ஒருபக்கத்தில் இருந்து ஒருவர் ‘கியர்’ போட்டுக்கொண்டு ‘ஸ்ரேறிங்கை’யும் பிடித்துக்கொண்டிருக்க, மற்றுமொருவர் மறுபக்கத்திலிருந்து ‘அச்சிலேற்றறை’ அமத்திக்கொண்டு ‘பிறேக்கிலும்’ கால் வைத்துக்கொண்டிருக்கிறார்.
டிரைவர் இருப்பது கூட வெளியில் தெரியவில்லை.
அவர்களின் சிந்தனை எல்லாம் பஸ்ஸை எங்கே கொண்டுபோவது என்பதல்ல, ஆசனத்தில் தாங்களே அமர்ந்து ஓட்டுவதற்கு எப்போது சந்தர்ப்பம் வரும் என்பதுதான்.
போகும் இடம் எது என்பது கூட அவர்களுக்கு பொருட்டல்ல.
அதனால் தான் அந்த பஸ்ஸில் பயணிப்பது போகவேண்டிய இடத்திற்கு போய்ச்சேரமுடியாது என்பதால் மட்டுமல்ல, ஆபத்தானது என்பதாலுமே அதிலிருந்து ஆட்கள் இறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களைப் போய் தனது பஸ்ஸில் ஏறச்சொல்லுகிறார் சங்கரி ஐயா. முதலில் பஸ்ஸை எங்கே கொண்டுசெல்வது என்பதையும் எந்த வீதியால் செல்வது என்பதையும் முடிவுசெய்யவேண்டும்.
அதன் பின்னர், அவ்வளவு தூரம் ஓட்டக்கூடிய ஒருவரிடம் டிரைவர் சீற்றைக் கொடுத்துவிட்டு, வேண்டுமெனில் பின்னால் உள்ள சீற்றில் அமர்ந்திருந்துகொண்டு, டிரைவர் ஒழுங்காக ஓடுகிறானா? நடத்துனர் எல்லோருக்கும் ரிக்கற்கொடுத்து காசை கணக்கு காட்டுகிறானா என்று கவனித்துக்கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் பயணிகள் அந்த பஸ்ஸில் ஏறுவார்கள்.
இந்த யதார்த்தத்தை சங்கரி ஐயா முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

  • ஊர்க்குருவி