தமிழ்த் தேசிய அரசியலில் புதிய சவால்கள்?

0
191

தமிழ்த் தேசிய அரசியல் இதுவரையில் எதிர்ப்பு அரசியலாகவே இருந்து வந்திருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதே, இந்த எதிர்ப்பின் நோக்கமாகும்.
1949இல் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து, இதனை ஓர் அரசியல் பாரம்பரியமாகவே தமிழ்த் தேசிய கட்சிகள் பேணிப் பாதுகாத்து வந்திருக்கின்றன.
இனியும் இவ்வாறானதோர் அரசியலை பேணிப்பாதுகாக்க வேண்டிய தேவைதான் இருக்கின்றது. ஏனெனில், சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கு இதுவரையில் பச்சைக் கொடி காண்பிக்கவில்லை.
ஆகக் குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டத்தைக்கூட முழுமையாக அமுல்படுத்தவில்லை.
இதில் தமிழ் அரசியல் கட்சிகளின் தவறுகளும் உண்டு.
2015இல் அவ்வாறான வாய்ப்பு இருந்த போதிலும்கூட, அதனை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு சம்பந்தன் முயற்சிக்கவில்லை.
சாத்தியமற்ற புதிய அரசியல் யாப்பில் நேரத்தை விரயம் செய்திருந்தார்.
ஆனால், எதிர்ப்பு அரசியலை தொடர்ந்தும் முன்னரைப் போன்று முன்னெடுப்பதிலும், இப்போது புதிய சவால்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இது தொடர்பில் தமிழ்த் தேசியர்கள் என்போர் கவனமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
2009இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது, முற்றிலும் தேர்தல் மைய அரசியலாகவே இருக்கின்றது.
தேர்தல்களில் மக்கள் வெறுமனே கொள்கை அடிப்படையில் மட்டும் வாக்களிப்பதில்லை.
ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பெரியளவில் தமிழ்க் கட்சிகள் தொடர்பில் மக்களிடம் எதிர்பார்ப்புக்கள் இருந்திருக்கவில்லை.
ஏனெனில், போராட்டத்தின் மூலம் உச்சபட்சமான ஒரு தீர்வு தொடர்பில் மக்களிடம் நம்பிக்கையிருந்தது. ஆனால், இப்போது நிலைமை அப்படியல்ல.
உச்சபட்சமான அரசியல் தீர்வு தொடர்பில் இப்போது மக்களிடம் பெரியளவில் நம்பிக்கையில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் என்னும் உணர்வின் அடிப்படையில் வாக்களிக்கின்றனர்.
இந்த நிலைமை ஏற்றஇறங்கங்கள் உடையது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த நிலைமையை நாம் தெளிவாக அவதானித்திருந்தோம்.
எனவே, முன்னரைப் போன்று – ‘அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவி’, என்னும் அடிப்படையில் தமிழ்த் தேசிய கட்சிகள் செயலாற்ற முடியாது.
எதிர்ப்பு அரசியலையும் தொடர வேண்டும் அதேவேளை, மக்கள் சலிப்படைந்து தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து வெளியேறாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கான உத்திகள் தொடர்பில் தமிழ்த் தேசியர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
மாகாண மட்டத்தில் அபிவிருத்தி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு, தேசிய அளவில் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுக்கும் தந்திரோபாயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
வெறும் கோஷங்களின் மூலம் மட்டும் அரசியலை முன்னெடுக்கும் காலம் முடிவுறுகின்றது.
இதனை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டால், தமிழ்த் தேசியக் கட்சிகள் மோசமான பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது தொடர்பில் சிந்திக்கும் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, வடக்கு – கிழக்குக்கான பிரத்தியேக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
இதில் அனைத்துக் கட்சிகளும் இணையும் வகையில், கூட்டு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.
எல்லாவற்றிலும் கொள்கை வாதங்களை முன்னிறுத்திக் கொண்டிருப்பது சரியான அணுகுமுறையல்ல. கொள்கை என்பது மக்களுக்கானதுதான்.
மக்களை கருத்தில் கொள்ளாத கொள்கையால் மக்களுக்கு என்ன நன்மை? சர்வதேச அழுத்தங்கள், இந்தியாவை நோக்கிய செயல்பாடுகள் அனைத்தையும் வழமைபோல் முன்னெடுக்கும் அதேவேளை, தமிழ்த் தேசியத்தை முன்வைக்கும் கட்சிகள்மீது, மக்கள், நம்பிக்கை இழக்காத வகையிலான செயல்பாடுகளும் அவசியம்.