ஜெனிவா சவால்?

0
202

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புக்களும் வழமைபோல் கடிதங்களை அனுப்பிவைத்திருக்கின்றன.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில், மீளவும் அமெரிக்கா நேரடியாக தலையீடு செய்யவுள்ளது. இந்த நிலையில்தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜெனிவா சவாலாக அமையாதென்று குறிப்பிட்டிருக்கின்றார்.
47 உறுப்பு நாடுகளை கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது, 2006இல் உருவாக்கப்பட்டது.
அதுவரையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு என்னும் பெயரிலேயே இது அழைக்கப்பட்டது. பேரவையாக மாற்றப்பட்டபோது, அப்போது அமெரிக்காவை ஆட்சி செய்த, ஜோர்ஜ்.டபிள்யு. புஸ் தலைமையிலான குடியரசு கட்சி நிர்வாகம், மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து கொள்ள மறுத்திருந்தது.
ஆனால் 2009இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் நிர்வாகம் பேரவையுடன் இணைந்து செயற்படும் கொள்கை நிலைப்பாட்டை எடுத்தது.
பேரவையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம்தான், பேரவையின் செயற்பாடுகளை வீரியமுள்ளதாக்க முடியுமென்பதே ஒபாமா நிர்வாகத்தின் நிலைப்பாடாக இருந்தது.
பேரவையின் செயற்பாடுகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.
இந்த நிலையில், மனித உரிமைகள் அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் அங்கம் என்னும் வகையில், பேரவையில் அங்கம் வகிப்பதன் ஊடாகவே, பேரவையின் செயற்பாடுகளை தாக்கமுள்ளதாக்க முடியுமென்று, அப்போதையே அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில்தான், இலங்கையின் இறுதி யுத்தம் மோசமான மனித அழிவுகளுடன் முடிவுக்கு வந்தது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவந்த நிலையில்தான், 2012இல், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அனுசரணையுடன் முதலாவது பொறுப்புக் கூறல் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அன்றைய சூழலில் அமெரிக்க பிரேரணை என்றே அது அழைக்கப்பட்டது.
அமெரிக்கா அனுசரணை வழங்காதிருந்திருந்தால், அவ்வாறானதொரு பிரேரணையை கொண்டு வந்திருக்க முடியாது.
அமெரிக்க ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட பொறுப்புக் கூறல் பிரேரணைக்கு பதிலளிக்கும் பொறுப்பை, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தட்டிக்கழித்தது.
இந்த நிலையிலேயே மேலும் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டன.
ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பின் எதிர்ப்புப் போக்கில் சடுதியான மாற்றமொன்று ஏற்பட்டது.
2015இல் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு இணையனுசரணை வழங்கி, அதனை அமுல்படுத்துவதாக ரணில் – மைத்திரி அரசாங்கம் வாக்குறுதியளித்தது.
சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படவில்லை.
மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ராஜபக்ஷக்களின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட போது, மகிந்த காலத்து கொள்கையே தூசுதட்டப்பட்டது.
மீளவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் மோதும் கொள்கை நிலைப்பாட்டையே கோட்டாபய அரசாங்கம் கடைப்பிடித்தது.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நல்லாட்சி அரசாங்கமென்று அழைக்கப்பட்ட ஆட்சியின் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவும், பேரவையுடன் மோதும் கொள்கை நிலைப்பாட்டை கொண்டிருந்த ராஜபக்ஷவினரும் ஓரணியில் இருக்கின்றனர்.
இவ்வாறானதொரு புதிய அரசியல் சூழலில்தான் அடுத்த மாதம் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் மீளவும் எடுத்துக் கொள்ளப்படப் போகின்றது.
பொருளாதார நெருக்கடியை ஒரு துருப்புச் சீட்டாக அரசாங்கம் முன்வைக்கலாம்.
இந்த அடிப்படையில்தான் ஜெனிவா சவாலாக அமையப் போவதில்லையென்று ரணில் கூறுகின்றார். ஆனால் தங்களின் பிடியை முழுமையாக கைவிடாத வகையிலேயே அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு முடிவுகளை கைக்கொள்ளும்.
அதேவேளை, இலங்கை விவகாரம் மனித உரிமை சிந்தனைகள் மீது நம்பிக்கையுள்ள உலக சமூகத்தினர் மத்தியிலும் அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடக் கூடாதென்னும் கரிசனையும் குறித்த நாடுகளிடம் இருக்கும்.
அதேவேளை தமிழர்கள் எதிர்பார்ப்பது போன்று அதிக கடுமையான அழுத்தங்களையும் வழங்குவார்களா என்பதும் கேள்வி.
ஏனெனில் அதிக அழுத்தங்களை பிரயோகிக்கும்போது, அது நாடுகளை தனிமைப்படுத்தவே வழிவகுக்கும்மென்னும் பார்வை அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலுண்டு.
ஜோன் ஹெரி அமெரிக்க செனட் வெளிவிவகார குழுவின் தலைவராக இருந்தபோது, இலங்கை தொடர்பில் அவ்வாறானதொரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் ஏனையவர்களை விடவும் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை பக்குவமாக அணுகக்கூடிய அனுபவங்களை கொண்டிருக்கின்றார் என்பது உண்மைதான்.
எனவே ரணிலை குறைத்து மதிப்பிடுவது சரியாக இருக்காது.
அதிகம் எதிர்க்காமல், அமுல்படுத்துவோம் ஆனால் காலம் தேவையென்னும் தந்திரோபாயத்தையே ரணில் கைக்கொள்ளக்கூடும்.