மூன்று நாட்களாக இடைநடுவே தவித்த இலங்கையர்கள்

0
137

இலங்கையிலிருந்து கடல் மூலமாக இந்தியாவுக்குச் சென்று மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட கைக்குழந்தை உள்ளிட்ட 8 நபர்களை இந்திய கடலோர காவல் படையால் மீட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் காரணமாகக்காட்டி, இந்தியாவிற்கு அகதிகளாக தஞ்சமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், இலங்கையில் இருந்து இரண்டரை மாத கைக்குழந்தை உள்ளடங்களாக எண்மர் கடல் மார்க்கமாக இந்தியாவிற்குச் செல்ல முயற்சித்துள்ளனர். இவர்களை ஏற்றிச் சென்ற படகு, இந்திய எல்லைக்குள், மூன்றாம் மணல் திட்டுப் பகுதியில் அவர்களை இறக்கிவிட்டுத் திரும்பியுள்ளது. கைவசம் இருந்த 3 லீட்டர் தண்ணீருடன், கடந்த மூன்று நாட்களாக மணல் திட்டுப் பகுதியில் இவர்கள் தவித்துள்ளனர். அகதிகளாக வருகை தந்து, இடைநடுவே சிக்கியுள்ளவர்கள் தொடர்பில் தகவலறிந்த இந்திய கடலோர காவல் படை, இன்று காலை அவர்களை பாதுகாப்பாக மீட்டது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி இதுவரை 134பேர் இந்தியா தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.