கடன் மறுசீரமைப்பு வெற்றியளித்தால், டிசம்பரில் ஐ.எம்.எவ்வின் நிதி கிடைக்கும்

0
193

வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு இடம்பெற்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிவழங்கல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருந்தார். கடன் வழங்கும் காலத்திட்டம் உடன்படிக்கைக்கு அமைய தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் நிதி தொடர்பாக உறுதிப்படுத்தி எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதக் காலப்பகுதியினுள் சகல விடயங்களிலும் அவர்களது ஒத்துழைப்பு இலங்கை அரசாங்கத்துக்கு கிடைக்குமாயின் டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கான நிதி வழங்கல் ஆரம்பமாகும். எனினும் இந்த கால அளவு வெளிநாட்டு கடனளிப்பாளர்களின் நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளது. இலங்கை, வெளிநாட்டு கடனளிப்பாளர்களுடன் உத்தியோகப்பூர்வமான தொடர்பினை இதுவரை மேற்கொள்ளவில்லை. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்துக்கு பின்னரே வெளிநாட்டு கடனளிப்பாளர்களை தொடர்பு கொள்ள முடியும். கடனளிப்பாளர்களுடனான உத்தியோகப்பூர்வ கலந்துரையாடலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்க முடியும் என நம்புவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.