மலையக சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் இடைத்தரகர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறான இடைத்தரகர்களை இனங்காண்பதற்கு மலையக இளைஞர், யுவதிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ;ணன் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்கவின் உறவினர் வீட்டில் வீட்டு பணி பெண்ணாக பணியாற்றி வந்த மஸ்கெலியா மொக்கா தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
மலையக சிறுவர், சிறுமியர் வேலைக்கு அமர்த்தப்பட்டு பலிகொடுக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இது குறித்து மலையக பெற்றோர் சிந்திக்க வேண்டும்.
கடந்த வருடம் ஜீலை மாதம் 15ஆம் திகதி மரணமடைந்த ஹிசாலினியின் துயரம் நிறைவடைவதற்கு முன்னால் மற்றுமொரு இழப்பை சந்தித்திருக்கின்றோம்.
இடைத்தரகர்கள் தங்களுடைய இலாபத்துக்காக இவ்வாறான சிறுவர்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசென்ற விற்பனை செய்கின்றார்கள்.
இந்த இடைத்தரகர்களாக செயற்படுகின்றவர்களை இனம்கண்டு அவர்களை நீதிமன்றத்தில் நிறத்த வேண்டும். குறிப்பாக மலையக இளைஞர், யுவதிகள் இந்த விடயத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டும்.
கிராம சேவகர்களும் தங்களுடைய சமூகத்தின் மீது அக்கரையுடன் செயற்பட வேண்டும்.
பெற்றோர்களை பணத்தின் மீது ஆசையை காட்டி சில தரகர்களே இந்த விடயங்களில் ஈடுபடுகின்றனர். முதலில் இவர்களை இனம் கண்டு சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.
பெற்றோர்கள்ள் சிந்தித்து செயற்படாத வரையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பது உண்மை. மலையக பெற்றோர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏறபடுத்த வேண்டியது நம் அனைவருடைய கடமையாக இப்போது மாறியுள்ளதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.