முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்கள், சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.
நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால், குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டது.
இதன் போது, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் உடனிருந்தார்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கையெழுத்திட்டார்.
எதிர்வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில், எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன், பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
கடந்த 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி, அலரி மாளிகைக்கு வெளியே, நீதித்துறையை அவமதிக்கும் வகையில், ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க, சத்தியக்கடதாசி ஒன்றை, நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவற்றை மீளப் பெறுவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்க மாட்டேன் எனவும், ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், இன்று மாலை, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.