இப்படியும் நடக்கிறது!

0
173

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அவர் வெளிநாடுகளில் தங்கியிருக்கும்போது ஏற்படும் செலவுகள் பற்றி பலரும் தத்தமக்கு தெரிந்தவாறு சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.
அவர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றபோது அதற்கான விமானப் பயணத்திற்கான பணத்தை யார் செலுத்தினார்கள் என்று ஒரு ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தனவை ஊடகவியரலாளர்கள் கேட்டபோது, அவர் அதுபற்றி தெரியவில்லை என்றும் அறிந்து சொல்கின்றேன் என்றும் கூறியிருக்கலாம்.
ஆனால் அவரும் ‘அதில் என்ன, அவர் முன்னாள் ஜனாதிபதி என்பதால் அவருக்கு இருக்கும் அனுகூலங்களைப் பயன்படுத்தி அரசாங்கமே செலவிட்டிருக்கலாம்’ என்று நினைத்தாரோ தெரியவில்லை. முன்னாள் ஜனாதிபதி என்ற நிலையில் அவர் பெறக்கூடிய அனுகூலங்களைப் பற்றியும் சொல்லிவிட்டு அரசாங்கமே செலுத்தியதாக அமைச்சர் சொல்லியிருந்தார்.
ஆனால், அப்படியல்ல, அந்தப் பயணங்களுக்கான செலவை அவரது புதல்வரே ஏற்றார் என்ற செய்தியை பின்னர் தகவல் திணைக்களம் தெரிவிக்கவேண்டியதாயிற்று.
அரசாங்கம் செலவிட்டிருந்தாலும் அதில் தவறு காணமுடியாது.
ஆனால், அவரது குடும்பமே இந்தச் செலவை செய்கின்றபோது அதனை தெளிவுபடுத்தவேண்டியது தகவல் திணைக்களத்தின் பொறுப்பானது.
அமெரிக்காவில், அதுவும் நாஸாவில் பணியாற்றும் அவரது ஒரே புதல்வருக்கு தனது தந்தையின் பயணச் செலவை செலுத்துவது என்பது பெரிய விடயமே அல்ல.
அதுமாத்திரமன்றி, சிங்கப்பூரில் அவர் 24 நாட்கள் தங்கியிருந்தபோது அதற்காக ஆறு கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்பட்டதாகவும் முன்னர் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்த ஹோட்டலில் ஆகக் கூடியது 400 டொலர் அளவிலேயே ஆகக்கூடிய அறை வாடகை அறவிடப்படுவதாகவே அந்த ஹோட்டலின் இணையத் தளத்தில் இருக்கின்றது.
எங்கிருந்து இந்த ஆறு கோடி வந்தது என்பதும் தெரியவில்லை.
இவையல்ல இப்போது நாம் சொல்ல வருவது.
அவர் விரைவில் தாயகம் திரும்பவிருப்பது பற்றி ஏற்கனவே இந்தப்பத்தியில் பார்த்திருந்தோம்.
அவர் அவ்வாறு தாயகம் திரும்பியதும் அவரை தமது கட்சியில் இணைத்துக்கொண்டு அவருக்கு முக்கிய பதவியையும் வழங்குவதற்கு விமல் வீரவன்ஸ தரப்பு முயன்று வருவதாகவும், அதற்கான பேச்சுக்களை அவர்கள் தங்களுக்கிடையில் நடத்தி முடித்துவிட்டதாகவும் கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்தது.
அதனால்தான் அவர் தாயகம் திரும்பியதும் அவரை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து, பின்னர் அவரையே பிரதமராக நியமிக்கவும் பொதுஜன பெரமுன திட்டமிட்டுவருவதாக ஒரு செய்தி திட்டமிட்டு பரப்பப்படுவதாக மற்றுமொரு செய்தி தெரிவித்தது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அவரால் மாத்திரம் ஏற்பட்டதல்ல என்றும், அது அவர் ஜனாதிபதியாக பதவியேற்றபோதே ஏற்படத் தொடங்கியிருந்தது என்றும், அவர் பதவியேற்றபோது நாட்டின் டொலர் கையிருப்பு ஒரு சில வாரங்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்கு மாத்திரமே போதுமானதாக இருந்தது என்றும் வாதிட்டுவரும் சிலர், அவரை இப்போதும் சிங்களபௌத்த காவலராகவே பார்க்கின்றனர் என்றும் அந்த கொழும்பு செய்தியைச் சொன்ன ஊடகர் தெரிவித்தார்.
இதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவருக்கு அமைச்சரவையில் இடம்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவருக்கு நெருக்கமான ஒருவர் மூலம் தூது விடப்பட்டதாகவும், ஆனால் அவர் அதனை முற்றாக நிராகரித்துவிட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவித்தது.
அப்படி ராஜபக்ஷ குடும்பத்தில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால் ‘அரகலய’ விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கலாம் என்று எச்சரித்த ரணில், நாட்டில் மக்கள் என்ன மனநிலையில் இருக்கின்றார்கள் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதில் வல்லவரான மகிந்த ராஜபக்ச, அதனை நாடிபிடித்துப் பார்த்துவிட்டு அப்படியொரு நேரம் வரும்போது தாராளமாக தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ரணில் சொல்லியனுப்பியிருக்கிறாராம்.!

  • ஊர்க்குருவி