2022 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன.
இப்போட்டி, டுபாய் சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
2022 ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நேற்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு மோதின.
குழு பி அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில், பாகிஸ்தான் அணி கறுப்பு கை பட்டிகளை அணிந்து விளையாடவுள்ளது.
தமது நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவையும், அனுதாபத்தையும வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு கறுப்புப் பட்டி அணிந்து விளையாடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடும் வெள்ளத்தினால் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பாகிஸ்தான் அரசாங்கம், பருவமழை வெள்ளத்தை சமாளிக்க அவசரநிலையை அறிவித்தது.
ஜூன் மாதம் தொடங்கிய பருவமழையின் விளைவாக, கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உட்பட இந்த ஆண்டு 900 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சுமார் 220,000 வீடுகள் முழுமையாகவும், 5 இலட்சம் வீடுகள் மோசமாகவும் சேதமடைந்துள்ளன.