சோவியத் ஒன்றியத்தின் இறுதி தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் காலமானார் – உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்

0
180

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் இறுதித் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் 91 வயதில் இன்று காலமானார்.
1985 இல் ஆட்சியைப் பிடித்த கொர்பச்சோவ், அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் உலகமயமாக்கலுக்கு வழி ஏற்படுத்தினார். உள்நாட்டிலும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார்.
ஆனால் நவீன சோவியத் ஒன்றியத்தில் மெதுவான வீழ்ச்சியை அவரால் தடுக்க முடியவில்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவான சோவியத் ஒன்றியம். லெனின், ஸ்டாலின் காலத்தில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது இந்த கூட்டமைப்பில் சுமார் 15 நாடுகள் இடம்பெற்றிருந்தன.
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக சோவியத் ஒன்றியம் இருந்தது. அப்போதைய உலக ஒழுங்கில் சோவியத் ஒன்றியம் மிக முக்கியமான இடத்தில் இருந்தது. இன்றைய புதிய உலக ஒழுங்கு என்பதும் சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் மீது கட்டமைக்கப்பட்டது தான்.
சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவராக 1985-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் மிக்கைல் கொர்பச்சோவ். சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடுகள் பிரிந்து செல்லும் உரிமையையும் கொர்பச்சோவ் அனுமதித்தார். இதன் விளைவாக 1991-ல் சோவியத் ஒன்றியம் என்கிற கட்டமைப்பு கலைந்து அதில் இடம்பெற்றிருந்த உக்ரைன், லிதுவேனியா உள்ளிட்ட 15 நாடுகள் சுதந்திர நாடுகளாகின. 1990-இல் கொர்பச்சோவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
இந்நிலையில் 91-வது வயதில் முதுமை காரணமாக கொர்பச்சோவ் காலமானார்.

அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொர்பச்சோவ் வரலாற்றின் போக்கை மாற்றியமைத்தவர் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
கொர்பச்சோவ் ஒரு சிறந்த அரசியல்வாதி உலகம் ஒரு உயர்ந்த தலைவரை இழந்துவிட்டது. பலதரப்பு மற்றும் அமைதிக்காக அயராது வாதிடுபவர் எனவும் குட்டரெஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.