கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி, அமைதியான போராட்டக்காரர்களைக் குறிவைப்பதை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 18 ஆம்திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூன்று செயற்பாட்டாளர்களை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இதில் விசாரணையின்றி ஒரு வருடம் வரை விளக்கமறியலில் வைக்க முடியும். ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உள்ளிட்ட உரிமைகளை நசுக்கியுள்ளார். அவரது நிர்வாகம் ஒரு மாத அவசரகால நிலையை விதித்தது, ஆர்ப்பாட்டக்காரர்களை வன்முறையில் கலைக்க பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தியது மற்றும் அமைதியான போராட்டங்களில் பங்கேற்ற பல பொதுமக்களை கைது செய்தது. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்துவதாகவும், உரிமைகளை மதிக்கும் சட்டத்தை அதற்குப் பதிலாக மாற்றுவதாகவும் அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளன.
‘சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் மக்களை அமைதியான முறையில் முடக்குவதற்கு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஜனாதிபதி விக்ரமசிங்க பயன்படுத்தியிருப்பது, அவரது நிர்வாகத்தின் போது உரிமைகளுக்கு முன்னுரிமை கிடைக்காது என்ற ஒரு செய்தியை இலங்கையர்களுக்கு அனுப்புகிறது’ என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்தார். 2015 இல் பிரதமராக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஒருமித்த தீர்மானத்தை ஆதரித்தபோது, சட்டத்தை நீக்குவதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
2017 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜூ.எஸ்.பி பிளஸ் திட்டத்தில் இலங்கை மீண்டும் சேர்க்கப்பட்டபோது, சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளுக்கு இணங்குவதற்குவதாக உறுதிமொழியை அவர் மீண்டும் அளித்தார்.
ஜூலை மாதம், அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை நடைமுறையில் நிறுத்திவைத்துள்ளதாக கூறினார். முன்னதாக, மார்ச் 22 அன்று, அப்போதைய நீதிஅமைச்சரும், தற்போதைய வெளியுறவு அமைச்சருமான, அலி சப்ரி, ‘பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்பு கொண்ட குற்றங்கள் தவிர மற்ற குற்றங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு நடைமுறைத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று நாடாளுமன்றத்தில் கூறினார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஹஷந்த ஜீவந்த குணதிலக்க மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகிய மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ‘அரசியல் சீர்திருத்தம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டில் உள்ள தமது பங்காளிகளின் அழைப்புகளை புறக்கணிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முனைப்புடன் இருப்பதாக தெரிகிறது’ என்று மீனாட்சி கங்குலி குறிப்பிட்டுள்ளார்.