நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் மழை பெய்து வருகிறது.
நீர்போசன பிரதேசங்களுக்கு பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகிறது.
இதனால் களனி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைவதனால் ஆற்றின் அருகாமையில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேநேரம் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கெனியோன் காசல்ரி மவுசாக்கலை லக்ஸபான நவலக்ஸபான பொல்பிட்டிய மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாகவும் இந்த நீரினை பயன்படுத்தி உச்ச அளவில் மின் உற்பத்தி இடம்பெற்று வருவதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன இந்த மண் சரிவு அபாயம் நிலவும் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளனர்.