பிரிட்டனின் புதிய பிரேரணையில் இந்தியா நடுநிலைவகிக்கும் சாத்தியம்

0
199

ஜெனிவா சென்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்த்ரா மணி பாண்டேவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானதுடன், அன்றைய தினமே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதமும் நடைபெற்றது. அதனையடுத்து இரு தினங்களில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் தயாரித்திருக்கும் புதிய பிரேரணை வரைவு வெளியாகியிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவா பயணமாகியிருப்பதுடன் அங்கு சில முக்கிய சந்திப்புக்களிலும் கலந்துகொண்டுள்ளார். அதன் ஓரங்கமாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இந்த்ரா மணி பாண்டேவை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய பிரேரணை தொடர்பிலும் அவருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லையென இதன்போது இந்தியப்பிரதிநிதி மணி பாண்டே சுட்டிக்காட்டியிருந்தார்.
அவ்விடயம் இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையில் பின்னணியைத் தெளிவுபடுத்தும் பந்தியில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், அதனை செயற்பாடுகள் தொடர்பான பந்திக்கு மாற்றுமாறு சுமந்திரன் ஏற்கனவே இணையனுசரணை நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் மணி பாண்டேவை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய பிரேரணையை ஆதரிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ள போதிலும், இவ்விடயத்தில் இந்தியா நடுநிலைவகிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.