நாட்டின் எதிர்காலம் குறித்த வாக்குறுதியை அளித்தே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டது. தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே அந்த உறுதி என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவே நாம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த கால வரலாற்றை எடுத்துக்கொண்டால் தொடர்ச்சியாக கடனை பெற்று நாட்டை கடன் நெருக்கடிகளுக்குள் தள்ளிய அரசாங்கங்களுக்கு மத்தியில் கடனை பெறாது பெற்ற கடனை அடைக்கும் செயற்பாட்டை எமது அரசாங்கமே முன்னெடுத்தது.
நாங்கள் எடுத்த சில தவறான தீர்மானங்கள் காரணமாக எம்மால் அந்த பயணத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாமல் போனது.
அதேபோன்று பொருளாதாரத்துடன் தொடர்புடைய நிதி அமைச்சுக்கு நியமிக்கப்பட்டவர்களை உரிய நேரத்தில் வெளியேற்றாததன் காரணமாகவும் இந்த நிலைமை ஏற்பட்டது.
சர்வதேச நிதியத்துக்கு செல்வது என்பது ஒரு வழியென்று நாம் தொடர்ச்சியாக இந்த அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தோம்.
எனினும் ஆனால் இந்த நாட்டின் எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் உட்பட சிலர், சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதுதான் இந்த நாட்டுக்கு உள்ள ஒரே வழி என புலம்பினார்கள்.
இன்றைய நிலையில் நீர்கட்டணம், மின்சார கட்டணம் என்பன அதிகரித்துள்ளன.
பொருளாதார ரீதியாக சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பாமல் கடனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்குச் செல்லும் போது, ஒரு நாடு என்ற ரீதியில் இது போன்ற ஒன்றை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அண்மைய நாட்களாக மின்கட்டண உயர்வு குறித்து பெரும் பரபரப்பும் விமர்சனமும் எழுந்துள்ளது.
மின்கட்டண உயர்வு என்பது குறிப்பிட்ட சிலருக்கானது அல்ல. நாம் அனைவருமே மின்கட்ட அதிகரிப்புக்கான சவாலை எதிர்கொண்டுள்ளோம்.