சீன ஜனாதிபதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

0
168

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஜி ஜின்பிங் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது அரசு ஊடகமோ இந்த விடயம் தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வழங்கவில்லை. ஜி ஜின்பிங் சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அவர் பல நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2020ல் எல்லை மோதல்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேருக்கு நேர் சந்தித்தார். இந்நிலையில், ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து பல ட்விட்டர் பயனர்கள் பதிவிட்டுள்ளனர். சிலர் இது ஒரு இராணுவ சதி என்றும், இராணுவ வாகனங்கள் ஏற்கனவே தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையில், ஜி ஜின்பிங்கை பிஎல்ஏ தலைவர் பதவியில் இருந்து சிசிபி மூத்தவர்கள் நீக்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக வதந்திகள் பரவியுள்ளதாக அமெரிக்காவில் வசிக்கும் சீன மனித உரிமை ஆர்வலர் ஜெனிபர் ஜெங் ட்விட் செய்துள்ளார். நேற்று பெய்ஜிங்கில் எந்த வணிக விமானங்களும் பறக்கவில்லை என தெரிவித்து ட்விட்டரில் அறிக்கைகள் உள்ளன. சில சீன நிபுணர்கள் சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகளுக்கு அப்பால் இன்னும் சதிப்புரட்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை என கூறுகின்றனர். சீனாவின் நிபுணரான ஆதில் பிரார், ஜி ஜின்பிங் உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய பிறகு தனிமைப்படுத்தலில் இருக்கக்கூடும் என கூறினார். இந்த வார தொடக்கத்தில் சீனா இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதித்ததை அடுத்து, ஜி ஜின்பிங்கின் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஊகங்கள் வந்துள்ளன. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களும் மற்ற நான்கு அதிகாரிகளும் ஒரு ‘அரசியல் பிரிவை’ சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அடுத்த மாதம் அரசியல் கூட்டத்திற்கு முன்னதாக சீனாவின் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உயர்ந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.