நாட்டின், வடமேற்கு பிரதேசத்தின் காற்றாலை ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பல இந்திய நிறுவனங்கள் இந்த திட்டங்களில் ஆர்வமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தாலும் அந்த நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
இலங்கையின் வடமேற்குப் பகுதியில் காற்றாலை ஆற்றல் திட்டங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என்பது நன்கு அறியப்பட்டதாகும்.
இந்தநிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது இந்திய மற்றும் இலங்கை வெளிநாட்டு உறவுகளில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் ஒரு பகுதியாகும் என்று இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதை இலங்கை அரசாங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது.