22ஆம் திருத்தச்சட்ட மூலத்தை நாடாளுமன்றில் இரண்டாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன் மீது இன்றும் நாளையும் பாராளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ளது. நீதி மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கூடியது. இதிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 22ஆம் திருத்தத்தின் மூலம், ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களுக்கு அப்பால் 22ஆம் திருத்தத்தில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படாத விடயமான 41இ உறுப்புரைக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநரை அரசமைப்புப் பேரவையின் ஒப்புதலின் பிரகாரம் ஜனாதிபதி நியமிப்பார் என்பது முக்கியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், 19ஆவது திருத்தத்தின் கீழ், நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்குப் பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சு சம்பந்தப்பட்ட விடயங்களை வைத்திருப்பதற்கான அதிகாரம் 22ஆம் திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு விடயத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.