அண்மையில் தமிழ்த் தேசிய கட்சிகள் சம்பந்தனின் இல்லத்தில் கூடி ஆராய்ந்திருந்தன.
இதனை ‘ஈழநாடு’ வரவேற்றிருந்தது.
தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வை, ரணில் விக்கிரமசிங்க உச்சரித்துவரும் நிலையில்தான் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
தொடர்ந்தும் ஏமாந்து கொண்டிருக்கமுடியாதென்னும் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சிகள் ஆராய்ந்திருந்தன.
உடனடி, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் விடயங்களை அணுகுவதற்கான ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன என்று கட்சிகளின் தலைவர்கள் கூறியிருந்தனர்.
இவ்வாறானதோர் அணுகுமுறை தொடர்பில் நாம் தொடர்ந்தும் வலியுறுத்திவந்திருக்கின்றோம்.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் தென்னிலங்கையின் பொறிக்குள் அகப்படுவதைத் தவிர்க்கும் வகையில், இன்னும் சில விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
அதாவது பேச்சை அல்லது சர்வகட்சி சந்திப்பை எதிர்கொள்வதற்கு முன்னர் சில வீட்டு வேலைகளை செய்யவேண்டும்.
அது என்ன வீட்டு வேலைகள்? ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் பேசுவதாகக் கூறினாலும் வெறும் கையுடன் சென்று
வெறுங்கையுடன் திரும்பும் வகையில் தமிழ்க் கட்சிகளின் செயல்பாடுகள் அமையக்கூடாது.
கடந்த காலத்தில் இவ்வாறுதான் நடந்திருந்தது.
உடனடி, இடைக்கால மற்றும் நீண்டகால அடிப்படையிலான முன்மொழிவு ஆவணமொன்றை அனைத்துக் கட்சிகளும் இணைந்து தயாரிக்கவேண்டும்.
அந்த ஆவணத்தின் அடிப்படையில்தான், தென்னிலங்கையை எதிர்கொள்ள வேண்டும்.
இதில், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு இறுதி இலக்காக இருக்க வேண்டும்.
சமஷ்டி முதலாவது விடயமாக இருக்கக்கூடாது.
சமஷ்டியை முதலாவது விடயமாக முன்வைத்தால் அதனையே காலத்தை இழுத்தடிப்பதற்கான ஒரு பொறியாக ரணில் பயன்படுத்தலாம்.
ரணில் – மைத்திரி ஆட்சிக்காலம் இதற்கு சிறந்ததோர் உதாரணம்.
ஐந்து வருடங்கள் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவிட்டு கூட்டமைப்பு வெறுங்கையுடன் திரும்பியது.
இதனால், கூட்டமைப்பு மக்கள் மத்தியில் அதிருப்தியை சந்தித்தது.
தேர்தலிலும் பின்னடைவை சந்தித்தது.
ஏனெனில், ரணில் இனப்பிரச்னைக்கான தீர்வை எந்த வேளையிலும் ஒரு பொறியாக மாற்றலாம்.
காலத்தை இழுத்தடித்துவிட்டு அனைவரதும் உடன்பாடில்லாமையால் தன்னால் விடயங்களை முன்கொண்டு செல்லமுடியாதென்று கைவிரிக்கலாம்.
ஏனெனில், ரணில் ஒருபுறம் அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றார்.
மறுபுறமோ, மாவட்ட சபை முறைமையை மீளவும் கொண்டுவருவதற்கும் தான் தயாரென்று கூறுகின்றார்.
தனது எதிர்கால அரசியல் நகர்வுகளுக்காக அனைவரையும் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றாரா என்னும் கேள்வியும் எழுகின்றது.
எனவே, ரணிலின் நகர்வுகளை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு மூலோபாய ஆவணத்தைத் தயாரிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் விடயங்களை கையாள வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முதலாவது விடயமாக இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்களை பேசவேண்டியதில்லை.
ஏனெனில், ரணில் தேசிய இனப்பிரச்னை பற்றியே பேசவருமாறு அழைக்கின்றார்.
இதற்குள் ஏனைய பிரச்னைகளை பேசினால் அதனைக் கொண்டே பிரதான விடயத்தை மடை மாற்றமுடியும்.
இரண்டாவது, 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அதன் ஆரம்ப காலத்தில் இருந்தது போன்றதொரு நிலைக்கு மீளவும் கொண்டுவரப்பட வேண்டுமென்று கோரவேண்டும்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இதனை முன்னெடுக்கும் பட்சத்தில், 13இற்கு அப்பால் செல்வது தொடர்பான அரசியல் பேச்சுகளை ஆரம்பிக்கலாம்.
13இற்கு அப்பால் செல்வதற்கான தென்னிலங்கையின் ஆர்வத்தை முன்னைய நடவடிக்கைகளிலிருந்து நாம் மதிப்பிடலாம்.
அவ்வாறில்லாது அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்னும் அடிப்படையில் செயல்படுவோமாக இருந்தால், அது ரணிலின் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரத்துக்குள் மீண்டுமொருமுறை தமிழ் கட்சிகளை சிறைப்படுத்தும்.
விடயங்கள் ஒவ்வொன்றையும் கடந்தகால அனுபவங்களிலிருந்து உற்றுநோக்க வேண்டும்.
தமிழர் தரப்பின் அணுகுமுறை தென்னிலங்கையை ஒரு பொறிக்குள் சிக்கவைக்கும் நோக்கில் அமைந்திருக்க வேண்டும்.
அரசமைப்பில் இருப்பதையே அமுல்படுத்த முடியாதவர்களால், எவ்வாறு அரசியல் தீர்வை காணமுடியுமென்னும் கேள்வி தென்னிலங்கையை நெருக்கடிக்குள் தள்ளும்.
இதற்கேற்ப தமிழர் தரப்பு தந்திரோபாயங்களை கையாள வேண்டும்.