பரிகசிக்கப்படும் தமிழ் சிவில் சமூகம்?

0
150

பேச்சை கட்சிகள் எவ்வாறு கையாள வேண்டுமென்று சிவில் சமூகமாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் அல்லது தங்களை குடிசார் சமூகமென்று வெளிக்காட்டிவருபவர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதேபோன்று கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டுமென்றும் சிவில் சமூக குழுக்கள் கோரிவருகின்றன.
இப்போதும்கூட, அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளிலும் கட்சிகளின் ஒன்றிணைவு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான செயல்பாடுகளுக்கு மத்தியில்தான், இலங்கை தமிழரசு கட்சியானது உள்ளூராட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது.
இதன் பொருள் என்ன? 2009இல் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, ஐந்து கட்சிகளின் கூட்டான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசிய அரசியலை பொறுப்பேற்றது.
2010இல், கட்சிகளுக்கான ஆசன ஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக (ஏனைய கட்சிகளின் பார்வையில்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.
கொள்கை முரண்பாட்டின் காரணமாக வெளியேறியதாகவே பொன்னம்பலம் அணி கூறிவருகின்றது.
பின்னர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ. பி. ஆர். எல். எவ்) வெளியேறியது.
கூட்டமைப்பின் கட்டமைப்பிலுள்ள சிக்கல்களை காரணம்காட்டியே ஈ. பி. ஆர். எல். எவ். வெளியேறியது.
பின்னர், கூட்டமைப்பால் முதலமைச்சராக்கப்பட்ட சி. வி. விக்னேஸ்வரன் கூட்டமைப்புக்கு எதிராகக் கட்சியொன்றை உருவாக்கினார்.
இந்த இடைப்பட்ட காலத்திலும் – அதற்கு பின்னரும், தமிழ் சிவில் சமூகத்தை பிரதி நிதித்துவம் செய்தவர்கள், புத்திஜீவிகள், கருத்துருவாக்கிகள், மதத்தலைவர்களென்று பலரும் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிறேமச்சந்திரன் ஆகியோரை ஒன்றிணைத்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்றன.
அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
பின்னர் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டமைப்புக்கு வெளியிலிருக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைத்து, மாற்று தமிழ் தேசிய அணியொன்றை கட்டியெழுப்பும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.
இதேபோன்று, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் (பேரவை என்பது கட்சிகளையும் உள்ளடக்கியது) மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
அனைத்து முயற்சிகளின்போதும் சிவில் சமூகத்தின் கருத்துகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
அவர்களின் உழைப்பு பரிகசிக்கப்பட்டது.
ஆனாலும்கூட, வேதாளம் முருங்கை மரத்தில்போல் கட்சிகள் செயல்பட்ட போதும்கூட, மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்தியன்கள் போன்று சிவில் சமூக குழுக்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தன.
ஆனால், ஒருபோதுமே சிவில் சமூகத்தின் கருத்துகள், கரிசனைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், பலரும் ஓரணியாக நில்லுங்கள் என்று, சிவில் சமூகம் கூறிவருகின்ற நிலையில், தமிழரசு கட்சியானது தேர்தலை தனியாக எதிர்கொள்ளவுள்ளதாக அறிவித்திருக்கின்றது.
ஒரு கட்சிக்கு தேர்தலை தனித்து எதிர்கொள்வதா அல்லது இணைந்து எதிர்கொள்வதா என்று முடிவெடுக்கும் உரிமையுள்ளது.
ஆனால் இங்கு, ஒன்றாக நில்லுங்கள் என்று கூறிவருபவர்களின் கருத்துகளுக்கு வழங்கப்படும் மதிப்பு என்ன? சிவில் சமூகங்களாகத் தங்களை முன்னிறுத்துபவர்கள் தேர்தல் அரசியல் சிக்கல்களை விளங்கிக்கொள்ளால் கற்பனை செய்கின்றனரா அல்லது அவர்கள் தங்களை பலமான நிலையில் அணிதிரட்டிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனரா? சிவில் சமூக அமைப்புக்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக இருக்கும் வரையில், இவ்வாறான பரிகசிப்புகள் தொடரும்.
ஏனெனில், சிவில் சமூகமாக தங்களை முன்னிறுத்துபவர்கள் எவருமே அரசியல் கட்சிகளின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்க முடியாதவர்கள்.
இதன் காரணமாகவே, அவர்களின் குரல்களுக்கு தமிழ்த் தேசிய கட்சிகள் செவிசாய்ப்பதில்லை.
சிவில் சமூக அமைப்புக்கள், இப்போதிருக்கின்ற நிலையிலேயே இருக்குமாயின், இனியும் இவ்வாறுதான் நடக்கும்.