தமிழக முதல்வரிடம் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கை!

0
175

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக, கல்வியில் வாழ்வாதார உதவியை வழங்கும் வகையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி ஆகியவற்றை நிர்மாணித்து தரவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரியுள்ளதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.

இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் கல்வித் தரம் தொடர்ந்தும் மிகக் குறைவாகவே உள்ளது.

மேலும், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தில், இலங்கைத் தமிழர்கள் முழுமையான உரிமை கோர முடியாது என்றும், இந்திய வம்சாவளித் தமிழர்களும் அந்த அடையாளத்தின் ஒரு பகுதி என்றும் அவர் கூறியுள்ளார். எனவே இந்தக் கல்லூரியை நிர்மாணிப்பதற்கும், பெருந்தோட்டங்களில் மலையக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நிபுணர்களை அனுப்புவதற்கும் தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்களில் வளாகங்களை நிறுவுவதற்கு தமிழக அரசாங்கம் உதவவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். மலையக யுவதிகள் இலங்கையில் வீட்டு வேலை செய்பவர்களாகவும் சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்கின்றனர். அவர்கள் பல தொல்லைகளை சந்தித்துள்ளனர். எனவே, எங்கள் இளம் பெண்களை செவிலியர்களாகப் பயிற்றுவிப்பதற்காக, தமிழக அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரியை நிறுவ வேண்டும்.

இதுவரை, தமிழக அரசும் மக்களும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்களைப் பற்றியே சிந்திக்கின்றன போர், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம், இன பிரச்சினை போன்றவை காரணமாக இந்த கருத்து உருவாகியுள்ளது.

எனினும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் இந்திய-தமிழர்கள், அவர்கள் தமிழ்நாட்டில் வேர்களைக் கொண்டவர்கள் மற்றும் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அவர்கள் தென் தமிழகத்தில் இருந்து திருச்சி, நாகர்கோவில், மதுரை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்கள்.

எனினும் துரதிஷ்டவசமாக, அந்த மக்களின் பிரச்சினைகள் புறக்கணிக்கப் படுவதுடன், அடிக்கடி தமிழகத்திற்கு வரும் ஈழத் தமிழ் அரசியல்வாதிகள், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் முறையான மௌனம் கடைப்பிடிக்கின்றனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள். 50சதவீத தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியே வசிப்பதால் இது உண்மையல்ல என்றும் மனோ கணேசன் தெ ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.