நண்பர் ஒருவர் லண்டனிலிருந்து போன் பண்ணினார்.
எடுத்த எடுப்பிலேயே சொன்னார்: ‘புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று தொடங்கிய ரணில், கருணாவைப் பிரித்து புலிகளை இல்லாமல் செய்தார்.
அதே போல, இப்போது தமிழ்த் தரப்புடன் பேச்சுவார்த்தை என்று கூட்டமைப்பைப் பிரித்து அதனையும் இல்லாமல் பண்ணிவிட்டார் கவனித்தீர்களோ?’ என்று.
அவரை இடைமறித்து நான் சொன்னேன், ‘ஒரு திருத்தம், புலிகளிலிருந்து கருணாவைப் பிரித்தது ரணில் இல்லை.
அவர் பிரிந்து சென்ற பின்னர் அவருக்கு பாதுகாப்பு வழங்கியது மாத்திரம்தான் ரணில் செய்தது.
அதேபோலத்தான் இப்போது தமிழரசு கூட்டமைப்பிலிந்து போனதற்கும் ரணிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லையே’ என்று. ‘இருக்கலாம்.
ஆனால் ரணிலோடு பேச்சுக்குப் போனால் இப்படித்தான் நடக்கும் என்பதைத்தான் சொல்ல வந்தேன்’ என்றார் நண்பர்.
புலிகளிலிருந்து கருணா பிரிந்தது எப்படி தனிப்பட்ட நலன் சார்ந்த விவகாரமோ அதேபோலத்தான் கூட்டமைப்பிலிருந்து தமிழரசு வெளியேறியதும்.
இப்படியொரு சம்பவம் நடக்கும் என்பது – சம்பந்தனுக்கு பிந்திய காலத்தில் நடக்கும் என்பது பலரும் எதிர்பார்த்ததுதான்.
ஆனால் அவர் இருக்கும்போதே தாம் நினைத்ததை செய்து முடித்திருக்கிறார்கள்.
அதுவல்ல இன்று நாம் இங்கே சொல்ல வருவது, நண்பர் ரணிலின் பேச்சுவார்த்தை பற்றி பிரஸ்தாபித்தபோதுதான் அந்த விடயத்தைச் சொல்ல மறந்துபோனது ஞாபகத்ததிற்கு வந்தது.
கடந்த டிசெம்பர் மாதம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக அனைத்து கட்சி மாநாடு நடந்து முடிந்திருந்தது.
அந்த மாநாட்டில் உடனடியாகச் செய்யவேண்டிய சில விடயங்கள் பற்றி முக்கியமாக பேசப்பட்டது.
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தினர் வசம் இருக்கும் தனியார் காணிகளை விடுவிப்பது, காணாமல்போனோர் விவகாரம் போன்றவற்றையே உடனடி பிரச்னையாக பேசப்பட்டது.
அதேவேளை, அரசியலமைப்புச் சட்டத்தில் தற்போது இருக்கின்ற சட்டங்களை முழுமையாக அமுல்படுத்துவது என்றும் ஒரு கோரிக்கை தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டது.
அது என்ன தற்போது இருக்கும் சட்டங்கள் என்று நம்மில் சிலர் விழி பிதுங்கி நின்றிருப்பர்.
வேறு ஒன்றுமல்ல, பதின்மூன்றாம் அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுதான் அந்தக் கோரிக்கை.
அதனை நேரடியாகச் சொல்லும் ‘தில்’ நமது தலைவர்களிடத்தில் இருக்கவில்லை.
அதனை வலியுறுத்தினால், எங்கே, பதின்மூன்றுடன் தமிழர் தரப்பு நின்று விட்டது என்று தமிழர் தரப்பிலிருந்தே கத்தத் தொடங்குவார்கள் என்ற பயம் அதற்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இருப்பதை செய்யச் சொல்லிக் கேட்பது ஒன்றும் தவறான விடயமல்லவே.
சரி அதனை விடுவோம்.
ஆனால் மேலே சொன்ன அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பின்னர், தமிழரசுக் கட்சியின் கோரிக்கையின் பேரில் டிசெம்பர் 21 ஆம் திகதி ரணில் தமிழரசின் சம்பந்தனையும், சுமந்திரனையும் சந்தித்தார்.
அது உத்தியோகப்பற்றற்ற பேச்சு என்று ஜனாதிபதி தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பேச்சின் பின்னர் ஜனாதிபதி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், தற்போதைய சட்டத்தில் அமுல்படுத்தப்படாத விடயங்களை தனக்கு பட்டியலிட்டுத் தருமாறு கேட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கோரிக்கை விடுத்த தமிழர் தரப்பு பதின்மூன்றை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவது இன்று நேற்றல்ல.
இந்த விடயம் குறித்து பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
ஆனால், அப்படி எந்த எந்த விடயங்கள் இதுவரை அமுல் படுத்தப்படவில்லை என்பதை ஜனாதிபதி கேட்டபோது அதனை உடனடியாகவே அவர் முகத்தில் எறிந்ததுபோல போடுவதற்கு நம்மவர்களிடம் இன்று வரை ஓர் ஆவணம் இல்லை.
ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்தவர்கள்.
அதிலும் சட்டம் தெரிந்தவர், நீதிவான் என்று வலுக்கட்டாயமாக அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட சி.வி.விக்கினேஸ்வரனிடம்கூட அப்படியொரு ஆவணம் இல்லை.
ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சி. தவராசா ஒருவரிடமே இதுபோன்ற ஒரு ஆவணம் தயாராக இருந்தது – இருக்கின்றது.
அதனால்தான் அந்த ஆவணத்தை அவர் சார்ந்த ஈ.பி.டி.பி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்.
உடனே ஒரு தமிழரசு ‘அல்லக்கை’ அதனை கேள்விக்குட்படுத்தியிருந்தமை ஈழநாடுவில் செய்தியாக வந்திருந்தது.
ஜனாதிபதி தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை கண்டுகொள்ளாத தமிழர் தரப்பு, கடைசியாக கடந்த பத்தாம் திகதி நடந்த கூட்டத்தில் மீண்டும் அதே கோரிக்கை விடுத்துள்ள அதேவேளையில், அதற்கு ஜனாதிபதிக்கு காலக்கெடு கொடுத்திருக்கின்றது.
பல தடவைகள் இந்தப் பத்தியில் குறிப்பிட்டதுபோல பாவம் தமிழ் மக்கள் என்று அனுதாபப்படத்தான் முடிகின்றது.
- ஊர்க்குருவி.