தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏழு நாட்கள் காலக்கெடு வழங்கியிருக்கின்றது.
இந்தக் காலக்கெடுவின் மத்தியில்தான் ரணிலின் யாழ். விஜயம் இடம்பெறவுள்ளது.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு காலக்கெடு வழங்கிய சந்திப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவும், தமிழ் மக்கள் கூட்டணியாகவும் இருந்தவர்கள் ரணிலின் யாழ்.விஜயத்தின்போது, மூன்று அணிகளாக இருக்கின்றனர்.
தைத்திருநாளில் ரணில் என்ன கூறுவார்? காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியலமைப்பில் இருக்கின்ற ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துவது – இவைகள் தொடர்பில் என்ன கூறுவார்? வரலாற்றில் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
அவ்வாறான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன.
ஒவ்வொரு தோல்வியின்போதும் சிங்களவர்கள் ஏமாற்றிவிட்டார்களென்னும் – சர்வதேசம் அழுத்தங்களை வழங்கவேண்டுமென்னும் கோசங்களுடன், தமிழ்த் தேசியம் சாதாரணமாக அதன் நாட்களை நகர்த்தியிருக்கின்றது.
ஆனால் இப்போது வழக்கத்திற்கு மாறாக, பேச்சுவார்த்தைக்கான பேச்சுவார்த்தையென்னும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவுடனான தொடர்புகள் பேணப்பட்டு வருகின்றன.
குறித்த காலக்கெடுவுக்குள், ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவதாகவும் கூட்டமைப்பினர் கூறியிருந்தனர்.
இவ்வாறானதொரு சூழலில்தான் தேர்தல் போட்டிக்குள் பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர்கள் மூன்று அணிகளாக பிளவுற்றிருக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் என்போரின் பலவீனங்களை புரிந்துகொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க பிரத்தியேகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.
ரணிலின் யாழ். விஜயத்தின்போதே, கட்சிகள் தங்களின் பலவீனத்தை கொட்சிப்படுத்தியிருக்கின்றனர்.
எனவே காலக்கெடுவிற்குள் விடயங்களை அழுத்தக்கூடிய பலமான நிலையிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் இல்லை.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் கட்சிகள் எவ்வாறு ஓரணியாக பயணிக்கும் என்பதிலும் தெளிவில்லை.
இதுவரையில் ஒன்றாக செயற்பட்ட, சி.வி.விக்கினேஸ்வரன், கட்சியின் சின்னம், பதவி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, வெளியியேறியிருக்கும்
நிலையில், அவரது செயற்பாடுகள் எதிர்நிலையிலும் இருக்கலாம்.
இந்த பின்புலத்தில் நோக்கினால், தென்னிலங்கையை எதிர்கொள்வதில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் தெளிவான வேலைத்திட்டம் எதுவுமில்லை.
ஈழநாடு தொடர்ந்தும் ஒரு விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கின்றது.
அதாவது, தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில், உடனடி, இடைக்கால, நீண்டகாலமென்னும் அடிப்படையிலான, அரசியல் தந்திரோபாயம் கட்டாயமானது.
ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவற்றிடமும் அவ்வாறானதொரு அரசியல் உபாயமில்லை.
ஒன்றில் அனைத்தையும் சாதாரணமாக எதிர்த்துக் கொண்டிருப்பது.
அடுத்தது, உடனடி மற்றும் இடைக்கால உபாயங்கள் தொடர்பில் சிந்திக்காமல், சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருப்பது.
இதற்கு மாறான அணுகுமுறையே மக்களுக்கு தேவையானது.
எனவே ஆட்சியாளர்களுக்கு காலக்கெடுவை வழங்குவதுடன் விடயங்கள் முடிந்துவிடவில்லை.
மாறாக, அதற்கேற்றவாறு பேரம் பேசுவதற்கான பலத்தை திரட்டிக்கொள்வது எல்லாவற்றைவிடவும் முக்கியமானது.