இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது?

0
142

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வழமைக்கு மாறான வகையில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் சந்தித்திருக்கின்றார்.
வழமையாக, பாராளுமன்ற உறுப்புரிமையிலுள்ள கட்சிகளையே இந்தியா சந்திப்பது உண்டு.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கூட்டமைப்பை சந்தித்த சந்தர்ப்பத்தில் அவ்வாறானதொரு நடைமுறையே பின்பற்றப்பட்டிருந்தது.
ஆனால், இம்முறை அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
அண்மையில், தங்களை கட்சியாக அறிவித்த சிறீகாந்தா – சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சி உட்பட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி உட்படஅனை வரையும் ஓரணியாக சந்தித்திருக்கின்றார்.
அரசியல் தீர்வு தொடர்பில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஜெய்சங்கர் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது, 13ஆவது திருத்தச் சட்ட விடயத்தில் நாங்கள் உங்களோடு இருப்போம்.
அதற்குமேல் பேசுவதில் பயனில்லை.
பேசலாம் ஆனால், பயனில்லை.
ஏனெனில், 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில்கூட நாட்டில் எதிர்ப்பு காணப்படுகின்றது.
நாடு மோசமானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற சூழலில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் நாடு முன்னோக்கி பயணிக்க முடியாது.
இந்த நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் உங்களோடு நிற்கும் என்னும் செய்தியே அனைத்து கட்சிகளுக்குமான இந்தியாவின் செய்தியாகும்.
இதன் மூலம் இந்தியாவின் நிலைப்பாடு அழுத்தம் திருத்தமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
நீங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளையும் வைத்திருக்கலாம் – அதேவேளை உங்களுக்குள் பல கட்சிகளாகவும் பிளவுற்றிருக்கலாம்.
ஆனால், இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்.
முதலில் மேசையில் இருப்பதை பயன்படுத்துங்கள்.
பின்னர் அதிலிருந்து மேல் செல்வது தொடர்பில் சிந்திக்கலாம்.
அண்மையில், இந்திய பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதும், புதுடில்லியின் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் மாற்றமில்லை என்றும் முன்னைய ஆட்சியாளர்கள் எதனை முன்னெடுத்தார்களோ அதனையே பி. ஜே. பியும் முன்னெடுத்து வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையின் அடிப்படை ஒன்றுதான்.
அதாவது, இலங்கை ஒரு நட்பு நாடு. எனினும், அங்குள்ள தமிழ் மக்கள் கௌரவத்தோடு வாழ்வதற்கான உரித்துடையவர்கள். – அந்த விடயத்தில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் இந்த அணுகுமுறை இந்தியாவில் எவர் ஆட்சியிலிருக்கின்றார் என்பதைக்கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல.
இது இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு.
இதனை கருத்தில் கொள்ளாமல் இந்தியாவிடம் சமஷ்டியை வலியுறுத்துவது ஒன்றில் அறியாமை – அல்லது இயலாமை.
இந்த விடயங்களை ஆழமாக புரிந்து கொண்டதன் விளைவாகவே ஈழநாடு 13ஆவது திருத்தச் சட்டத்தை பயன்படுத்துவதிலுள்ள அவசியத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்றது.
இதனை பலரும் சரியாக புரிந்துகொள்ளவில்லை.
நாங்கள் 13உடன் நின்றுவிடுமாறு வலியுறுத்துவதாகவே புரிந்துகொள்ள முற்பட்டனர்.
13உடன் நிற்பது பற்றியோ அல்லது 13இற்குள் முடங்குவது பற்றியோ நாம் பேசவில்லை.
13ஆவதை தாண்டிச் செல்லவேண்டுமென்றால் 13ஆவதை கையாண்டுதான் செல்ல வேண்டும்.
ஏனெனில், 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருப்பதையே அதிகமென்று வாதிடும் ஒரு சிங்கள தரப்பு இலங்கைத் தீவில் வலுவாக இருக்கின்றது.
இந்த நிலையில் 13ஆவது திருத்தத்தை தாண்டிச் செல்வதென்பது, 13ஆவதை கையாள்வதற்கு தயாரென்று கூறுவதிலிருந்துதான் ஆரம்பிக்க முடியும்.
இதனைத்தான் ஈழநாடு தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றது.
அதேவேளை தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கும் ஒன்றையும் இல்லாமலாக்கிவிட்டு எதனை நோக்கி நாம் செல்லப் போகின்றோம்? எங்களால் எங்கு செல்ல முடியும்? இந்தக் கேள்விகளிலிருந்தே நாம் 13ஆவதிலுள்ள சாதகமான விடயங்களை வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
அதுவே, இன்று நிதர்சனமாகியிருக்கின்றது.
சில விடயங்களை சரியாக புரிந்துகொள்ள முற்பட்டால், நமக்குள் தேவையற்ற வகையில் முட்டி மோதவேண்டியதில்லை.
ஏனெனில், எங்களுக்கு முன்னால் ஒரு கட்டமைப்பு இருக்கின்றபோது, அந்தக் கட்டமைப்பில் குறைபாடுகள் இருந்தாலும்கூட அதனை கையாண்டுதான் நாம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்.