தன்னாட்சி உரிமையை அங்கீகரி- மட்டு. நகர் பிரகடனம்

0
240

வட்டுக்கோட்டைத் தீர்மானம், பொங்குதமிழ் பிரகடனம், திம்புப் பேச்சுவார்த்தை என்பவற்றின் மூலம் வலியுறுத்தப்பட்ட, தமிழ் மக்களின் தன்னாட்சி, சுயநிர்ணயம், இறைமை என்பன ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களிற்கான இறுதித் தீர்வு சர்வதேச சட்டங்களின் பிரகாரம், சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன், தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையில் அமைய வேண்டும் என வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணித்த பேரணியின் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.


இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய
கரிநாள் எழுச்சிப்பேரணி இன்று மாலை மட்டக்களப்பில் எழுச்சியுடன் நிறைவுபெற்றது.
சுதந்திர தினத்தன்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கரிநாள் பிரகடனப்படுத்தப்பட்டு இந்த எழுச்சிப்பேரணி ஆரம்பமானது.
கிளிநொச்சி,முல்லைதீவு ஊடாக எழுச்சிப் பேரணி நேற்று திருகோணமலையினை வந்தடைந்ததுடன் அங்கு பல்வேறு இடங்களில் எழுச்சிப்போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.


நேற்று மாலை திருகோணமலை வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் தரித்திருந்த போராட்ட குழுவினர் இன்று காலை வாகரை நோக்கிப் பயணித்தனர்.
வாகரையினை அடைந்த பேரணிக்கு கதிரவெளியில் மக்கள் பலத்தவரவேற்பளித்ததுடன், பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியமும் பேரணியில்
கலந்துகொண்டது.


வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் கல்லறையில் ஈகச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் உறுதிமொழியும்
எடுத்துக்கொள்ளப்பட்டு, மட்டக்களப்பு நோக்கிய பேரணியின் பயணம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு நகரை எழுச்சிப்பேரணியடைந்ததும் நகர் ஊடாக காந்திபூங்காவரையில் வருகைதந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுகூரப்பட்டனர்.


தொடர்ந்து ஏழுச்சிப்பேரணியானது ஊர்வலமாக மட்டக்களப்பு வெபர் மைதானத்தை அடைந்து நிறைவுற்றது.


வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த இந்த எழுச்சி பிரகடன நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர்களனா
வேலன் சுவாமி,அருட்தந்தை ஜெகதாஸ் அடிகளார் மற்றும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய குருமார்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,அரசியல் பிரமுகர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.


பேரணியின் இறுதியில், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய கரிநாள் எழுச்சிப்பேரணியின் உறுதிமொழியெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழின அழிப்புக்கான சர்வதேச நீதிகிடைக்கும் வரையில் போராடுவதுடன் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளான தாயகம்,தேசியம்,சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படும் வரையில் எழுச்சிப்போராட்டங்கள்
தொடரும் என்றும் உறுதிமொழியெடுக்கப்பட்டது.


பிரகடன உரை வாசிக்கப்பட்டபோது, இலங்கையின் தேசியக்கொடியை அடையாளம் தெரியாத நபரொருவர் எரிக்க முற்பட்டமையால், குழப்பம் ஏற்பட்டது.
மதகுருமார்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலையீட்டால் குழப்ப நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.