இலங்கை அதன் கடன் மறுசீரமைப்புக்களை ஆரம்பிக்க முடியும் என்ற அறிவித்தல் சர்வதேச நாணய நிதியத்தினால் மார்ச் மாதமளவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அத்தியாவசியமாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
எஸ்.எல்.டி.சி. ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் கட்டத்திலேயே நாம் காணப்படுகின்றோம். எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கை கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
எனினும் அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அத்தியாவசியமாகும். புதிய அணுகுமுறைகளுக்காக புதிதாக சிந்திப்பதும் அவசியமாகும். நாம் தற்போது பரிமாற்ற யுகத்திலேயே காணப்படுகின்றோம்.
நல்லவை தீயவை என அனைத்தையும் எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புக்கள் நிறைவடைந்ததன் பின்னர் பல புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயராகவுள்ளோம்.